கொலைதூரம் சினிமா விமர்சனம்

‘இந்தியன்’, ‘அந்நியன்’ என பல படங்களில், ஹீரோக்கள் சிலரை குறிவைத்து கொலை செய்வதை பார்த்திருக்கிறோம். அவர்கள் அப்படி செய்வதற்கு நியாயமான காரணம் இருக்கும். அதேபோல இந்த கொலைதூரத்தின் நாயகன் தொலைதூரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, சில பெண்களை கொலை செய்கிறான். அந்த பெண்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? அவ்வளவுதான் கதை… இயக்கம் பிரபு

 

புதுமுக நாயகன் யுவன் பிரபாகர், சிரிக்கும்போது பளீரென தெரியும் அவரது பால் வண்ணப் பற்களைப் போல மனதளவில் வெண்மையாகவும் மென்மையாகவும், உடலளவில் நாள் முழுக்க வெயிலில் உழைத்துக் கருத்தவர்களைப் போன்ற நிறத்திலும் இருக்கிறார். அந்த மென் மனதோடு தங்கைகள் மீதும் மனைவி மீதும் பாசத்தைப் பொழிகிறார். அவரே வன்முறையாளனாகி பெண்களை தேடிப்பிடித்து வேட்டையாடும்போது வெறியேறிய முகபாவம் காட்டுகிறார். நெருப்புத் துண்டுகளைப் போல் சிவந்திருக்கும் அவரது கண்கள் அந்த வெறித்தனத்துக்கு சரிசமமாய் ஒத்துழைத்திருக்கின்றன.

நாயகனுக்கு மனைவியாக வருகிறவரின் லட்சணமான முகமும், அதில் தொற்றிக் கொண்டிருக்கும் குழந்தைத்தனமான புன்னகையும் கவர்கிறது. பாடலொன்றில் ரசிக்கும்படி நடனமும் ஆடியிருக்கிறார்.

தங்கைகளாக வருகிறவர்களாகட்டும் மற்ற முக்கிய பாத்திரங்களை ஏற்றிருப்பவர்களாகட்டும் பலரும் புதுமுகங்கள். அவர்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.

அம்பானி சங்கர், பெஞ்சமின், போண்டா மணி, கராத்தே ராஜா, ரஞ்சன் குமார் என பழக்கமானவர்களும் படத்தில் உண்டு.

பின்னணி இசையை ஏனோதானோவென தந்திருக்கும் இந்திரஜித், ‘கூடலூரு பொண்ணு குண்டுமல்லி கண்ணு’, ‘ஏனோ இதயமே இசையுடன் துடிக்குதே’, ‘சின்னச் சின்ன கன்னங்கள்’ என்ற பாடல்களில் இனிமையை இறக்கி வைத்திருக்கிறார்.

செந்தில்மாறனின் ஒளிப்பதிவில் குறையில்லை. கதாநாயகன் வேலை பார்க்கும் துபாயை தொழில்நுட்ப உதவியுடன் காண்பித்திருப்பதில் படத்தின் பட்ஜெட் தெரிகிறது.

உருவாக்கத்தில் நேர்த்தியும், திரைக்கதையில் விறுவிறுப்பும், தேர்ந்த நடிகர் நடிகைகளும் இல்லாதது படத்தின் பலவீனம்.

கொலை செய்யப்படுகிற பெண்கள் கதாநாயகனின் பார்வையில் தவறானவர்களாக இருக்கிறார்கள். சமூகமும் அவர்களை அப்படித்தான் பார்க்கும். அதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அவர்கள் அப்படி மாறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேசியிருந்தால் கதைக்களம் கனமாகியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here