வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி, உலக சினிமா வரிசையில் இடம்பிடிக்க முயற்சி செய்கிற அரிய படைப்புகளின் அணிவகுப்பில் இணைந்துள்ள படம்.
வெளியாவதற்கு முன்பே ஆஸ்கர் விருதின் வாசல் வரை சென்று, 60க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்த படம்.
தமிழ் சினிமாவில் மைல்கல் படைப்புகளில் ஒன்றாக ‘கூழாங்கல்.’
‘குடிகார கணவனிடம் சிக்கிச் சீரழியும் மனைவி’ என்பதை அடிப்படையாக கொண்ட படங்களை நிறையவே பார்த்தாயிற்று. கூழாங்கல்’ மூலம் இன்னொரு முறை பார்க்கிற வாய்ப்பு. ஆனால், பத்தோடு பதினொன்றாய் கடந்துபோய்விட முடியாதபடி, மண்ணுக்கு நெருக்கமான கதைக்களத்தை உருவாக்கி, கண்ணுக்கு கனமான காட்சிகளைத் தந்து மனதில் இடம்பிடிக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ்.
மதுவுக்கு அடிமையான அந்த மனிதாபிமானமற்ற மனிதனின் நடவடிக்கைகளால் மனம் நொந்த அவனது மனைவி கோபத்தோடு புறப்பட்டு, சிலபல கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிற அவளுடைய பிறந்த வீட்டுக்கு போய்விடுகிறாள். அவளை கூட்டி வர தன் மகனோடு கிளம்பிப் போகிறான் அந்த கணவன். போவதிலும் வருவதிலும் அவன் சந்திக்கும் அனுபவங்களே திரைக்கதை…
தாருக்கு நிகரான கறுத்த தேகம், போதை வழியும் கண்கள், அழுக்கடைந்த மீசை தாடி தலைமுடி, வியர்வைக் கசகசப்பு, செருப்பணியாத கால்கள், வசவுப் பேச்சில் சரளமாய் வந்து விழும் கெட்ட வார்த்தைகள் என கரடுமுரடு ஆசாமி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார் கருத்தடையான். கோபம், விரக்தி, இயலாமை அனைத்தையும் கலந்துகட்டி பிரதிபலிக்கும் அவரது முகபாவம் ஏற்ற பாத்திரத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறது!
அந்த குட்டிப் பையன் செல்லப்பாண்டி தன் அப்பா மீதான கோபத்தை நூதனமாக வெளிக்காட்டும் காட்சிகள் ரசிக்கும்படியிருக்கிறது; கூடவே அவற்றில் அடாவடி ஆணாதிக்க சமூகத்திற்கு அழுத்தமான சேதியுமிருக்கிறது!
இன்னபிற கதை மாந்தர்கள் தேர்வும் அவர்களின் பங்களிப்பும் நேர்த்தி!
சுட்டெரிக்கும் சூரியன், திரும்பிய பக்கமெல்லாம் கொடூர வறட்சி, ஒருகுடம் தண்ணீருக்காக கடுமையான வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்து கஷ்டப்படும் பெண்கள், எலியை சுட்டுச் சாப்பிடும் மக்கள், பாழடைந்த கோயில், சீட்டு விளையாடி பொழுதைக் கழிக்கும் பொறுப்பற்ற ஆண்கள், பெட்டிக் கடையில் மது விற்பனை என நம் மாநிலத்திலிருக்கும் மலைக் கிராமமொன்றை அதன் தன்மை மாறாமல் துளிகூட சினிமாத்தனம் கலக்காமல் காண்பித்திருப்பது படத்தின் தனித்துவம். எலிகள் ஓடிவிடாமலிருக்க கால்களை உடைத்து முடக்குவதெல்லாம் தமிழ் சினிமாவில் காணாத காட்சி!
இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள் என்று சொன்னாலே நம்புவது சிரமம், அதுவும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்று சொன்னால் சத்தியமாய் நம்ப மாட்டோம். அந்தளவுக்கு துளியும் அதிரடி காட்டாமல் இசைக் கருவிகளை மயிலிறகால் வருடியதுபோல் பின்னணி இசையமைத்து காட்சிகளை உயர்த்திப் பிடித்திருக்கிறார் யுவன்!
படம் முழுக்க அப்பாவும் மகனும் நடந்துகொண்டேயிருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் சற்றே சலிப்பூட்டுகிறது. ஆனாலும் கதைக்கு அது அவசியம் என்பதால் பொறுத்துக் கொள்வது கடமையாகிறது.
பாலைவனம் போன்று மணல் சூழ்ந்த பகுதியில் எங்கோ ஒரு இடத்தில் வெகு ஆ………ழத்தில் ஊறும் தண்ணீரை பெண்மணியொருவர் குடத்தில் நிரப்புவதாக ஒரு காட்சி. துளித்துளியாய் ஊறி திரளும் அந்த தண்ணீரை அந்த ஒரோயொரு குடத்தில் நிரப்ப வெகு நேரம் பிடிக்கிறது. அந்த உண்மை நிலவரத்தை அப்படியே காட்ட, பார்க்கும் நாம் பொறுமையிழந்து போகிறோம். நம் மண்ணில் வாழும் மக்கள் படும் அவஸ்தையை அதன் உண்மைத் தன்மையோடு பார்ப்பதற்கே பொறுமையில்லை நமக்கு. அந்த வேதனையை தினம் தினம் அனுபவிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? படத்தில் இதுபோல் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கின்ற காட்சிகளுக்குப் பஞ்சமில்லை!
விக்னேஷ் குமுளை, ஜெயபார்த்தி இருவரது ஒளிப்பதிவின் நேர்த்தியை நாள் முழுக்க புகழ்ந்தாலும் போதாது.
வித்தியாசமான படங்களை நேசிக்கிறவர்களுக்கு, உலக சினிமாக்களை விரும்புகிறவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக நல்லதொரு விஷுவல் ட்ரீட். அதில் சந்தேகமில்லை. கமர்ஷியல் சினிமா ரசிகர்களை நிச்சயம் திருப்தி படுத்தாது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த படத்தை தயாரித்து, உலகம் முழுக்க எடுத்துச் சென்ற நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தை பாரபட்சமின்றிப் பாராட்டலாம். படத்தை இப்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
–சு. கணேஷ்குமார், 99415 14078, startcutactionn@gmail.com