‘அப்பாடா இப்படியொரு காமெடி படம் பார்த்து எவ்வளவு நாளாகிறது’ என திருப்திபடும் படியான கதை, திரைக்கதையில் ‘குடிமகான்.’
படத்தின் நாயகன் குளிர்பானம் அருந்தினாலே ஆல்ஹகாலின் போதைக்கு ஆளாகிற புதுவிதமான வியாதிக்காரர். அதன் தாக்கத்தால் மனைவியுடன் சண்டை, அக்கம் பக்கத்தில் அவமானம் என நிம்மதியைத் தொலைக்கிறார். ஒருகட்டத்தில் அந்த வியாதியின் தீவிரத்தால் வேலையும் பறிபோகிறது. இது கதை.
அந்த வினோத வியாதிக்கு காரணம் என்ன? தீர்வு என்ன? நாயகன் அதிலிருந்து மீண்டாரா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் திரைக்கதை. இயக்கம் பிரகாஷ் என்எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாமல் குடிகாரன் என பெயரெடுக்கிற பரிதாபமான கதாபாத்திரத்தில் விஜய் சிவன். நடுத்தர குடும்பத் தலைவன், ஏடிஎம்.மில் பணம் நிரப்பும் பணியிலிருக்கிற எளிய சம்பளக் காரன் என ஏற்றுள்ள பாத்திரத்துக்கு அவரது அப்பாவித் தோற்றம் செம பொருத்தம். குடிக்காமலே போதையேறி அவர் செய்யும் காமெடி கலாட்டாக்களுக்கு ‘ஃபுல்’ மார்க் போடலாம்.
நாயகனின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக சாந்தினி, அப்பாவாக ‘பிக்பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி கதைக்கு தேவையானதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
போகிறபோக்கில் ஜங்க் ஃபுட் எனப்படும் ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் உணவுகளை தவிர்க்கச் சொல்லியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்!
காமெடி காட்சிகள் உடல் குலுங்க சிரிக்க வைக்க வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று… ‘வாழ்க்கைங்கிறது ஐஸ் மாதிரி; டேஸ்ட் பண்ணாலும் கரைஞ்சிடும், வேஸ்ட் பண்ணாலும் கரைஞ்சிடும்.’
தனுஜ் மேனன் இசையில் பாடல்களும் காட்சிகளின் நகர்வுகளுக்கேற்ற பின்னணி இசையும் கவர்கிறது. மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தின் முன்பாதி ஏடிஎம் கொள்ளை, நாயகனின் வேலையிழப்பு என கொஞ்சம் சீரியஸாக பயணித்தாலும் அதை அப்படியே புரட்டிப் போட்டதுபோல் மறுபாதியை நொடிக்கு நொடி சிரிக்க வைக்கிற காட்சிகளால் நிரப்பியிருக்கிறது. அந்த காட்சிகளில் குடிகாரர்கள் சங்கத் தலைவர் நமோ நாராயணன் குழுவினரும் பாவாடையணிந்து வருகிற டென்னிஸும் செய்கிற அட்ராசிட்டி கலகலப்புக்கு உத்தரவாதம்!
குடிமகான் – வெடிச் சிரிப்புக்கு கேரண்டி!