‘நண்பன் என்பவன் நட்புக்காக எதையும் செய்வான்’ என்பதை எடுத்துக் காட்டிய படங்களின் வரிசையில் புத்தாண்டின் புதுவரவாக, குமரி மாவட்டத்தைக் கதைக்களமாக கொண்ட ‘கும்பாரி.’
நாயகி மஹானாவுடனான முதல் சந்திப்பில் அவரது குறும்புத்தனத்தால் வெறுப்புக்கு ஆளாகிறார் விஜய் விஷ்வா. அவர்களின் அடுத்தடுத்த சந்திப்புகள் தித்திப்பாக மாற, அப்புறமென்ன காதல்தான், டூயட்தான்…
ரவுடித்தனத்தில் ஊறிப்போன மஹானாவின் அண்ணன், அவர்களது காதலை எதிர்க்க வாய்ப்பிருப்பதால் அவருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கிறது அந்த காதல் ஜோடி. அந்த முயற்சி அண்ணனுக்கு தெரியவர, அவன் அரிவாளோடும் அல்லக்கைகளோடும் ஆவேசமாக கிளம்ப, காதல் ஜோடி ஓடி ஒளிய பரபரக்கிறது திரைக்கதை.
‘தங்கையின் காதலை எதிர்க்கும் ரவுடி அண்ணன்’ என்றதும் வெட்டுக்குத்து, ரத்தச்சகதி, ஆணவக் கொலை என்றெல்லாம் பயங்கர சம்பவங்கள் அரங்கேறுமோ என பயந்தால், அப்படியெல்லாம் இல்லாமல் ஓரளவு ரசித்துச் சிரிக்கும்படியான கலவர கலாட்டாக்களோடு கடந்தோடுகிறது அடுத்தடுத்த காட்சிகள்… இயக்கம் கெவின் ஜோசப்
ஹீரோயின் ஆபத்தில் சிக்கிய தருணத்தில் ஓடிச் சென்று காப்பாற்றுவது, காதலில் விழுந்ததும் முகம்மலர்ந்து திரிவது, பாடல் காட்சியில் பாதம் நோகாமல் அசைந்தாடுவது என கதாநாயகன் என்றாலும் அதற்கேற்ற அலட்டல் ஏதுமில்லாமல் அடக்கி வாசித்திருக்கிறார் விஜய் விஷ்வா.
விஜய் விஷ்வாவின் கும்பாரியாக (கன்னியாகுமரி மீனவர்களின் பேச்சுமொழியில் கும்பாரி என்றால் நண்பன் என்று அர்த்தம்) நலீப் ஜியா. எதிர்ப்புகளைச் சமாளித்து நண்பனுக்கு கல்யாணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்து கதைக்களத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிற மஹானா. சேலையணிந்து வரும்போது திமிறும் இளமை அத்தனை செழுமை! ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் பாராட்டும்படியான நடிப்பைத் தந்தவர், இந்த படத்தில் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான எளிமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
தங்கையின் மீது ‘ஐயா சாமி ஆளவிடு’ என்கிற அளவுக்கு பாசம் காட்டுவது, வெளியில் வந்து விழுந்துவிடும்படி கண்களை உருட்டி மிரட்டுவது என காமெடி வில்லன் பாத்திரத்தில் ஜான் விஜய் செய்திருக்கும் அமர்க்களம் அளவாய் சிரிப்பூட்டுகிறது. அவரது அடியாளாக வருகிற சாம்ஸும் முடிந்தவரை கலகலப்பூட்டுகிறார்.
கதாநாயகியின் கழுத்திலிருக்க வேண்டிய மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, கதாநாயகியின் காதலனோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்து சிக்கலில் மாட்டி, கதையின் போக்கை சுவாரஸ்யப் பாதையில் திருப்பிவிடுகிறார் ‘தேனடை’ மதுமிதா.
‘பருத்தி வீரன்’ சரவணன் அங்காளி பங்காளிகளுடன் குடித்துக் கூத்தடிப்பதை கொஞ்சமாய் ரசிக்க முடிகிறது.
அம்மன் வேடத்தில் வந்து அலப்பரை செய்கிறார் செந்தி குமாரி. காதல் சுகுமாரும் அவரது அச்சுப்பிச்சு காமெடியும் எட்டிப் பார்க்கிறது.
ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி கூட்டணியின் இசையில், குமரி மக்களின் வட்டார வழக்கு மொழியில், அந்தோணி தாசன் குரலில் ‘அவிய இவிய எல்லோரும் கேளுங்க’ பாடல் உற்சாகமூட்ட, ‘நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே’ பாடலின் இசை இதம் தருகிறது.
கன்னியாகுமரியின் பசுமை, திற்பரப்பு அருவியின் நீள அகலம் என அனைத்தையும் அழகு குறையாமல் அள்ளி வந்திருக்கிறது பிரசாத் ஆறுமுகத்தின் கேமரா.
நட்பைப் பெருமைப்படுத்தும் விதத்தில் எடுக்க நினைத்து, அதில் அண்ணன் தங்கை பாசத்தை இணைத்து கலகலப்பூட்ட முயன்றதில், ஓரளவு குதூகல சவாரியாகியிருக்கிறது கும்பாரி!