குழந்தைகள் மனது குதூகலமாகும்படியான கதைக்களத்தில், அட்டகாசமான அனிமேஷன் படைப்பாக ‘குண்டான் சட்டி.’
இரண்டு சிறுவர்கள் ஹீரோக்களாக வந்து அசத்துகிற இந்த படத்தை இயக்கியிருப்பது 12 வயது சிறுமி அகஸ்தி என்பது ஆச்சரியம் தருகிற, தனித்துவமான தகவல்.
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் குப்பனும் சுப்பனும் நட்புக்கு உதாரணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆளுக்கொரு ஆண் குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தைக்கு வித்தியாசமாக தலையில் ‘சட்டி’ அமைந்திருக்கிறது.
ஒரு குழந்தைக்கு குண்டேஸ்வரன் என்றும் இன்னொரு குழந்தைக்கு சட்டீஸ்வரன் என்றும் பெயர் வைக்கப்பட, அவர்கள் ‘குண்டான்’, ‘சட்டி’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
அந்த இரு குழந்தைகளும் வளர வளர, தங்கள் தந்தையைப் போலவே நெருங்கிய நண்பர்களாக வலம்வருகிறார்கள். ஊரில் அவர்கள் விளையாட்டுத்தனமாக சில விஷயங்களில் ஈடுபட அவை சிலருக்கு தவம் செய்து கிடைத்த வரமாகவும் சிலருக்கு தலைவலி தருவதாகவும் இருக்கிறது. சிறுவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் அப்பாக்கள் மீது சீறிப்பாய, அந்த அப்பாக்கள் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனை தருகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டுவர முயற்சிக்கும்போது ஏற்படும் தடைகள், சவால்கள் என நகரும் கதையின்போக்கு முழுக்க முழுக்க சுவாரஸ்யம்.
சட்டீஸ்வரனின் தலையிலிருக்கும் சட்டியில் எதை வேண்டுமானாலும் போடலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். நிரம்பவே நிரம்பாது. தலையை சாய்த்தால் உள்ளே நிரம்பியிருப்பவை வெளியில் கொட்டும். அப்படியொரு வினோத சக்தி சட்டிஸ்வரனுக்கு.
இன்னொரு சிறுவனின் பெயர் குண்டேஸ்வரன் என்றாலும் தோற்றத்தில் ஒல்லிப் பிச்சான். எதையுமே துடுக்குத்தனமாக செய்பவன்.
இருவரின் தோற்றமும் அனிமேஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் அத்தனை அழகு. நம்மூர் விவசாயிகளை, பெரிய மனிதர்களை, ஏழைகளை அனிமேஷனில் பார்ப்பது நிச்சயமாய் வித்தியாசமான அனுபவம்!
தான் விவசாயம் செய்யும் கோயில் நிலம் நன்றாக விளைச்சல் தந்த பின்னும், கோயிலுக்கு பங்கு தராமல் ஏமாற்றும் விவசாயியிடமிருந்து சட்டி’யின் சக்தியால் கோயிலுக்கான பங்கினை பெற்றுக் கொடுப்பது,
ஏழை குடும்பத்துக்கு வட்டிக்கு கொடுத்து அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில், பாத்திரங்களை வெளியில் தூக்கிவீசும் சேட்ஜியிடமிருந்து சட்டி’யின் பலத்தால் பாத்திரங்களை மீட்டுத் தருவது,
கொரோனா ஊரடங்கில் மளிகைப் பொருட்களை பதுக்கும் வியாபாரிக்கு பாடம் புகட்டுவது என ஆரம்பக் காட்சிகளில் குண்டான், சட்டி கூட்டணி செய்வதெல்லாம் ரகளை!
அரிசிப்பொரி சாப்பிடுவதற்காக வைக்கோல் போரை பற்றவைப்பது, பசியைப் போக்கிக் கொள்வதற்காக பழம் சாப்பிடுகிறோம் என்ற பெயரில் வாழைத் தோப்பையே காலி செய்வது என கடந்துபோகும் குண்டான், சட்டி ஜோடியின் குறும்புத்தனமான அடாவடி அட்ராசிடி அத்தனையும் சிரிப்பு மூட்டும் சரவெடி!
தங்கள் பிள்ளைகள் செய்த தவறையுணர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, நிவாரணம் வழங்கும் குண்டான், சட்டியின் அப்பாக்கள் நல்ல முன்னுதாரணங்கள்!
கதையில் வருகிற அணிலுக்கு ஆபத்து நேர்கிறபோது குண்டானும் சட்டியும் உதவுவது, அவர்கள் ஆபத்திலிருக்கும்போது அந்த அணில் நன்றிக்கடன் செலுத்துவது என கடந்துபோகும் காட்சிகள் பிள்ளைகள் மனதில் நிச்சயம் நல்லெண்ணத்தை விதைக்கும்!
ஆசிரியரை பெருமைமிகு உயரத்தில் தூக்கி வைத்திருக்கிறது நிறைவுக் காட்சி!
போகிற போக்கில் நம் உடம்பை சுத்தப்படுத்தும் குளியல் சோப்பு தன் வாயால், தன்னை சுத்தமாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் ஆரோக்கிய கேடுகளை எடுத்துச் சொல்வது, தன்னை பயன்படுத்திவிட்டு பத்திரமாக வைக்காத அலட்சியத்தை டூத் பிரஷ் சுட்டிக் காட்டுவது என வந்துபோகும் காட்சிகள் நம் வீட்டு வாண்டுகளுக்கான அவசியமான அறிவுரை விருந்து!
‘பீட்சா பர்கர்லாம் வேண்டாம்; நம்மூர் தின்பண்டங்களே நன் பண்டங்கள்’ என சொல்லிக் கொடுக்கவும் செய்கிறது படத்திலிருக்கும் ஒரு காட்சி!
எம் எஸ் அமர்கீத் இசையில் ‘ஓடஓட விரட்டிப் பிடிப்போம் வெள்ளாட்டை’, ‘சிட்டுக்குருவி போல வட்டம் அடிப்போம் நாங்க’ பாடல்கள் உள்ளத்தில் ஊடுருவி உற்சாகமூட்டுகின்றன. பாடலுக்கான காட்சிகளை நம் வீட்டு வாண்டுகள் ‘ஒன்ஸ் மோர்’ கேட்பது உறுதி!
நெல்வயல், ஆறு, மூங்கில் தோப்பு என கதை நிகழும் ‘டெல்டா’ பகுதியின் செழுமையை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வருவது அரிதாகிப்போன சூழலில், அவர்களுக்குப் பிடித்த அனிமேஷன் வடிவத்தில் சிரிக்கவும் சிந்திக்கவுமான படத்தை இயக்கிய சிறுமி பி கே அகஸ்தி, வசனம் பாடல்களை எழுதிய அரங்கன் சின்னத்தம்பி, படத்தை தயாரித்த அகஸ்தியின் தந்தை கார்த்திகேயன் உள்ளிட்ட அத்தனைப் பேரும் பாராட்டுக்குரியவர்கள்.
பள்ளிக் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வசதியாக ஆங்காங்கே இருக்கிற சமூக ஆர்வலர்கள் ஏற்பாடும் நிதியுதவியும் செய்யலாம்!