நம் பால்ய வயதில், பள்ளிப் பருவத்தில் நாம் அனுபவித்த பாச நேசம், கஷ்ட நஷ்டம், ஏச்சுப் பேச்சு ஏமாற்றம் என பல நினைவுகளைக் கிளறிவிடுகிற உயிரோட்டமான திரைப்படங்கள் எப்போதாவது வருவதுண்டு; சைக்கிளில் ஏறி இப்போது வந்திருக்கிறது.
ஐந்து காசு, பத்து காசெல்லாம் புழக்கத்திலிருந்த, அந்த காசை வைத்து சிறுவர்கள் உலகமகா உற்சாகத்தை விலைக்கு வாங்கிவிடக்கூடிய காலகட்டத்தில் நடக்கும் கதை.
சைக்கிள் ஓட்டத் தெரியாததால் ‘நடராஜா சர்வீஸ்’ என ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் தந்தை, சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டிப் பழகிவிடத் துடிக்கும் மகன் இருவரும் சந்திக்கிற அனுபவங்களே குரங்கு பெடல்…
திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் சைக்கிள் என்ற சிறுகதையைத் தழுவி இயக்கியிருப்பவர் ‘மதுபானக் கடை ‘கமலக்கண்ணன்.
கதையின் நாயகனாக சிறுவன் சந்தோஷ் வேல்முருகன். நண்பர்களுடன் போய் வாடகை சைக்கிள் எடுத்தாலும் தான் ஓட்டிப் பழக வாய்ப்பு மறுக்கப்படும்போது காட்டும் பரிதாபம், காசு திருடி வாடகைக்கு சைக்கிள் எடுத்து குரங்கு பெடலடித்து ஓட்டிப் பழகும்போது காட்டும் உற்சாகம், செய்த தவறை மறைக்க முயற்சிக்கும்போது காட்டும் பயம் பதற்றம், சீட்டில் அமர்ந்து ஓட்டத் துவங்கிய தருணத்தில் ததும்பும் சந்தோஷம் என அத்தனை உணர்வும் அழகாய் அசத்தலாய் டெலிவரியாகியிருக்கிறது.
சைக்கிள் ஓட்டுவதில் மகனுக்கிருக்கும் ஆர்வத்தால் மன உளைச்சலோடு பணத்தையும் இழப்பது, அதற்காக மகன் மீது கோப்படுவது, அந்த கோபத்திலும் நிதானம் காட்டுவது, மகனின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து செயல்படுத்துவது என துணி நெய்பவராக வருகிற காளி வெங்கட்டின் நடிப்பு மனதைக் கொய்கிறது.
கதைநாயகனின் அம்மாவாக சாவித்திரி, அக்காவாக தக்ஷனா, நண்பர்களாக சிறுவர்கள் ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், அதிஷ், வாடகை சைக்கிள் கடை முதலாளியாக பிரசன்னா என அத்தனைப் பேரும் கதையின் தன்மைக்கு 100 சதவிகிதம் பொருத்தமான நடிப்பைத் தர,
கதை நிகழும் இடங்களும், கலை இயக்குநரின் உழைப்பும் 1980 காலகட்டத்தை அதன் தன்மை மாறாமல் கொண்டு வந்திருக்கின்றன. ஒளிப்பதிவின் நேர்த்தியை தனியாக பாராட்ட வேண்டும்.
இயக்குநர் பிரம்மாவின் வரிகளில் ‘கொண்டாட்டம்’ பாடலும், பேராசிரியர் போ.மணிவண்ணனின் வரிகளில் ‘தேராட்டம் போகுது’ பாடலும் ஜிப்ரான் இசையில் மனதுக்குள் புத்துணர்ச்சியை கூட்டுகின்றன.
கதையிலிருக்கிற யதார்த்தம், காட்சிப்படுத்தியிருப்பதில் உயிரோட்டம், சிறார்களைக் கவர்கிற உணர்வோட்டம் படத்தின் பலம். காத்திருக்கின்றன உயரிய விருதுகள்!
சிறந்த படைப்பான இந்த படத்தை வெளியிடுகிற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் சல்யூட்.
குரங்கு பெடல், தமிழ் சினிமாவின் பொக்கிஷம்!