குற்றப் பின்னணி சினிமா விமர்சனம்

குற்றப் பின்னணி‘ என்ற தலைப்பே கதைக்களம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட, நடக்கும் குற்றங்களையும் அதன் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் நமக்குள் பற்றிக் கொள்கிறது.

சைக்கிளில் சென்று பால் வியாபாரம் செய்கிற, ஸ்கூட்டியில் சென்று தண்ணீர் கேன் போடுகிற சூசை, குடும்பப் பெண் ஒருவரை தாலியால் கழுத்தைச் சிதைத்து கொல்கிறார். கொலைப்பழியை அந்த ஏரியா ஃபைனான்சியர் ஒருவர் மீது விழச் செய்கிறார். ஃபைனான்சியர் தலைமறைவானபின் அவரை தொடர்புகொண்டு நட்பாகி அவரையும் தீர்த்துக் கட்டுகிறார்.

போலீஸ் ஒருபக்கம் குற்றவாளியைத் தேடிக் கொண்டிருக்க, சூசை இன்னொரு குடும்பப் பெண்ணை பரலோகத்துக்கு அனுப்ப ஸ்கெட்ச் போடுகிறார்.

அந்த சூசை, நடந்த கொலைகளைச் செய்தது யார் என தேடிக் கொண்டிருக்கிற காவல்துறை அதிகாரிகளோடும் தொடர்பிலிருக்கிறார் என்பது கதையிலிருக்கிற சுவாரஸ்யங்களில் ஒன்று.

சூசை கொலை செய்ய தேர்வு செய்கிற பெண்கள் செய்த குற்றமென்ன? சூசையின் பின்னணி என்ன? இந்த கேள்விகளோடு படத்தின் ஒருபாதி நிறைவுக்கு வர மறுபாதியில், சிறு இடைவெளிவிட்டு வெறித்தனம் காட்டுகிற நம்மூர் கோடைவெயில்போல் கதை சூடுபிடிக்கிறது. இயக்கம் என்.பி.இஸ்மாயில்

படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு உயிர்பயம் காட்டிய சரவணன் இந்த படத்தில் சூசையாகி, கிட்டத்தட்ட அதே ராட்சசத்தனத்தை அரங்கேற்றும் வாய்ப்பைப் பெற்று கண்களில் குரூரம் காட்டி ரசித்து ருசித்து செய்திருக்கிறார்.

சூசையின் மனைவியாக புதுமுகம் தீபாளி. மாநிற தேகமும், கிறக்கமான விழிகளும், மெல்லிய கவர்ச்சி ததும்பும் உடற்கட்டும் பார்வையை இழுத்துப் பிடிக்கிறது. கணவனைப் பிரிந்து வழிமாறிப் போனபின், போலீஸ் ஸ்டேசன் பஞ்சாயத்தில் பேசும்போது வசன உச்சரிப்பில் வெளிப்படும் தெனாவட்டு பாராட்டத் தூண்டுகிறது.

ஃபைனாஸ்சியராக வருகிறவர் ஆரம்பத்தில் லேசாக உருட்டி மிரட்டிவிட்டு, அதன்பின் வெறொருவன் மனைவியோடு கொஞ்சிக் கூத்தடிப்பதில் மும்முரம் காட்டியிருப்பது கிளுகிளுப்பு. அந்த காட்சியில் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்திருக்கிறார் பளபளப்பும் தளதளப்புமாக இருக்கிற தாட்சாயிணி.

காவல்துறை அதிகாரிகளாக வருகிறவர்களின் துப்பறிதலில் கவன ஈர்ப்பு ஏதுமில்லாவிட்டாலும் நடித்துள்ளவர்களின் பங்களிப்பில் குறையில்லை. அதிகாரிகளில் ஒருவராக வருகிற கராத்தே ராஜாவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். இன்னபிற நடிகர், நடிகைகளும் ஏற்ற பாத்திரங்களில் சரியாக வெளிப்பட்டிருக்கின்றனர்.

கிரைம் திரில்லருக்கேற்ற பின்னணி இசையை கெத்தாக தந்திருக்கிறார் ஜித்.

கதாநாயகன் செய்யும் கொலைகள் அவன் பார்வையில் நியாயமாக இருந்தாலும், அந்த பெண்கள் செய்யும் குற்றத்திற்கு [அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிற சூழ்நிலையில்] உயிர் பறிக்கும் தண்டனை தேவையில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது!

கொலைகளுக்கான காரணம் வலுவாக இருந்திருந்தால், திரைக்கதை பலமாக இருந்திருந்தால், குற்றப்பின்னணி எட்டிப் பிடித்திருக்கும் வெற்றிப்பட வரிசையில் முன்னணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here