‘சாது மிரண்டால் நாடு தாங்காது’ கான்செப்டில் பரபர விறுவிறு கிரைம் திரில்லராக ‘குற்றம் புரிந்தால்.’
மாமா மீது பாசம், அவரது மகள் மீது நேசம் என ஹீரோவின் வாழ்நாள் உற்சாகமாக கழிகிறது. திடுதிப்பென மூன்று இளைஞர்கள் அந்த மாமாவை கொடூரமாக தாக்கி, அவரது மகளின் இளமையை குரூரமாக வேட்டையாடி ஹீரோவின் வாழ்நாளை நரகமாக்குகிறார்கள்.
குற்றம் புரிந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? அவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன? தண்டனையை கொடுப்பது சட்டமா, பாதிக்கப்பட்டவனா? இப்படியான கேள்விகளுக்கு பதில்களை சுமந்து பரபரப்பாக பயணிக்கிறது திரைக்கதை… இயக்கம் டிஸ்னி
ஹீரோவாக ஆதிக் பாபு. உயிருக்கு உயிரான மாமாவையும், உள்ளத்துக்கு நெருக்கமான காதலியையும் கண்ணெதிரிலேயே பறிகொடுத்து மனம் நொறுங்குவது, தன் எதிர்காலத்தை இருட்டாக்கியவர்களை தேடிப்பிடித்து பழி வாங்கத் துடிப்பது, அவர்களை சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பதையறிந்து தானே ஆக்ஷன் ஹீரோ அவதாரமெடுப்பது என கதைக்குத் தேவையானதை கச்சிதமாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவர் கண்ணியத்தின் எல்லையில் நிற்பதும் கவர்கிறது!நாயகி அர்ச்சனா முறைப்பையனுடன் கொஞ்சுவதும் டூயட்டில் கிறங்குவதுமாய் தனக்கு கொடுத்த வேலையை அளவாக, அழகாக செய்திருக்கிறார்!
மாமாவாக வருகிற எம்.எஸ். பாஸ்கரிடமிருந்து வழக்கம்போல் தேர்ந்த நடிப்பு!
‘நாடோடிகள்’ அபிநயா கிட்டத்தட்ட படத்தின் இரண்டாவது கதாநாயகி. அவரது உயரம் ஏற்றிருக்கும் காவல்துறை உயரதிகாரிக்கான கம்பீரத்தைக் கொடுக்க, துடிப்பான நடிப்பும், படபடக்கும் விழிகளும் பளீர் தோற்றமும் கண்ணுக்குள் நிறைகிறது!
‘ரேணிகுண்டா’ நிசாந்த், ‘போஸ்டர்’ நந்தகுமார், அருள் டி.ஷங்கர், ராம் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு!
‘பனித்துளி பனித்துளி’, ‘தொடுவானம் போல இருந்தாயே நீயே’ பாடல்கள் இதமாக இதயம் வருட, பின்னணி இசையில் கதையின் பரபரப்புக்கேற்ப விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் கே.எஸ்.மனோஜ்.
ஒளிப்பதிவு, படத் தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு நேர்த்தி!
பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்கள் குற்றம் புரிந்தால் என்ன நடக்குமோ அதையே கதைக்களமாக கொண்டிருந்தாலும், எளிய பட்ஜெட்டில் எதை செய்ய முடியுமோ அதை செய்திருக்கிற படக்குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!