டெலாய்ட் US நிறுவனத்தின் இந்திய அலுவலகங்கள் பிரிவானது, உலகளவில் பல நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக சென்னையில் ஒரு புதிய டெலிவரி அலுவலகத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது. டெலாய்ட் நிறுவனத்தின் ஆலோசனை வணிகங்களில் அதிகரித்து வரும் ‘திறன் மிக்க தொழில்துறை வல்லுநர்களின்’ தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, க்ளவுட், மனிதவள மூலதனம், அஸ்யூரன்ஸ், வரி, நிறுவன மதிப்பீடுதல், மற்றும் தொழில் நிறுவன ஒருங்கிணைப்பு & கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2500-க்கும் அதிகமான திறன் மிக்க தொழில்துறை வல்லுநர்கள் சென்னையிலிருந்து செயல்படவுள்ளனர்.
தரமணியில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவில் உள்ள இந்த புதிய சென்னை அலுவலகத்தை தமிழ்நாடு அரசின் – அரசு தொழில் நிறுவனங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர், செல்வி. பூஜா குல்கர்னி திறந்து வைத்தார்.
கற்றல், டிஜிட்டல் திறன் மேம்பாடு, மற்றும் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கி ஆதரிக்கும் புதுமையான அணுகுமுறைகளை மையமாகக் கொண்டு மனிதவளத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய டெலாய்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அற்புதமான திறமைசாலிகளையும், வணிக சேவைகள் ஏற்றுமதியில் அதிகரித்து வரும் வாய்ப்புகளையும் இந்த முயற்சி அங்கீகரிக்கிறது.
உலகளாவிய நிறுவனங்கள் அவற்றின் உயர்மட்ட பணிகளுக்காக இந்திய நாட்டின் திறன்மிக்க மனிதவளத்தை நாடுகின்றன; இது நம் நாட்டின் நிபுணத்துவம், மற்றும் நுணுக்கமான திறன்களை வெளிக்காட்டுகிறது.
இந்த அலுவலகங்களைத் திறப்பதன் மூலம், டெலாய்ட் நிறுவனத்தால் சிறப்புத் திறன் கொண்டவர்களை பணியமர்த்தவும், அடுத்த கட்ட வளர்ச்சியை மேற்கொள்ளவும் முடியும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளில் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன சேவைகளை வழங்கி வரும் டெலாய்ட், இந்த புதிய அலுவலகங்கள் மூலம் அதன் சேவை வழங்கும் திறன்களை மேலும் மேம்படுத்தவுள்ளது.