நாட்டுப்புறப் பாடகியாக மக்களுக்கு பரிச்சயமாகி, விஜய் டிவி மூலம் புகழ் பெரியளவில் புகழ் வெளிச்சத்தை சம்பாதித்த செந்தில் ராஜலெஷ்மி, ‘ஏ.. சின்ன மச்சான்’, ‘வாய்யா சாமி’ உள்ளிட்ட திரைப்படப் பாடல்கள் மூலமும் பிரபலமானார். அடுத்தகட்ட வளர்ச்சியாக நடிகையாக ‘லைசென்ஸ்‘ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். அறிமுகப் படத்திலேயே கதாநாயகியாக நடிக்கிற வாய்ப்பை பெற்றிருப்பது செந்தில் ராஜலெஷ்மிக்கு கிடைத்திருக்கிற மற்றொரு பெருமை!
கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 28.5. 2023 ஞாயிறன்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, ‘சண்டியர்’ ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஹைலைட் அம்சமாக தயாரிப்பாளர் ஜீவானந்தத்துடன் பள்ளியில் ஒன்றாக படித்து, இன்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் நண்பர்கள் 40 பேர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் ராஜலட்சுமி செந்தில் பேசும்போது, “இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால், இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைக்கிறது. இந்த படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. இயக்குநர் என்னிடம் சொல்லும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால், இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று சொன்னபோது அவர் என் மீது வைத்து நம்பிக்கையை கண்டு வியந்து போனேன்.
பைஜூவின் இசையில் நிறைய ஆல்பங்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடியுள்ளேன். நல்ல இசையமைப்பாளர் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். அயலி’ அபி நட்சத்திரா நடிக்கும் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை. 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம் தான்.
இன்று இந்த நிகழ்வுக்கு என் கணவர் வரவில்லை. அதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லை. எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த மே மாதம் முழுவதும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இன்று இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டி இருந்ததால் கணவரை எனக்கு பதிலாக அந்த நிகழ்வுக்கு அனுப்பி விட்டேன்” என்றார்.
தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குநர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால், இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார். படப்பிடிப்பு சமயத்தில் என்னை, தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை. அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன். அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன். நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.
இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்டக் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘கோல்’ என்று டைட்டில் வைத்துள்ளோம். ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்றார்.
இயக்குநர் கணபதி பாலமுருகன் பேசும்போது, “எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குநர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள். எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று சொன்னேன்.
படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.
இந்த படத்தில் பல நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ராட்சசர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். படத்தில் பாடல்களை எழுதியுள்ள ரமணிகாந்தன் வரும் காலத்தில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு டப் கொடுப்பார். சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.
மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா பேசும்போது, “ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும். ஆனால், ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே, படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்து விட்டார். ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.. உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாகத்தான் இருக்கும்” என்றார்.