காதல் மோதல், மகிழ்ச்சி நெகிழ்ச்சி, வறுமை பொறுமை, வில்லங்கம் விரகதாபம், கண்ணியம் கட்டுப்பாடு என பலவற்றை பிரதிபலிக்கும் ‘லாக்டவுன் டைரி.’
காதலித்துக் கைப்பிடித்த மனைவியோடும், நான்கைந்து வயது நிரம்பிய பெண் குழந்தையோடும், கால் டாக்ஸி டிரைவர் பணியில் கிடைக்கிற வருமானத்தை வைத்து எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞன் விஜய். கொரோனா ‘லாக்டவுன்’ அவனது வருமானத்தைப் பாதிக்க, கொடுத்த கடனைக் கேட்டு நச்சரிப்பவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்; மிரட்டுபவர்களால் நிம்மதியிழக்கிறான்.
நெருக்கடியோடு நெருக்கடியாக, ‘குழந்தைக்கு மூளையில் கட்டி, உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து, அதற்கு 15 லட்சம் வரை செலவாகும்’ என்ற சூழ்நிலை அவனைச் சுற்றி வளைத்து தாக்குகிறது.
கால் டாக்ஸியில் பயணித்த வகையில் பழக்கமான ஒரு பணக்கார பெண் அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவ முன்வருகிறாள். நன்றிக் கடனாக ஒரு வில்லங்கமான விபரீதமான விஷயத்தை செய்யச் சொல்கிறாள்.
அவள் சொன்னது என்ன? சூழ்நிலைக் கைதியாக நிற்கும் அவன் என்ன முடிவெடுத்தான்? குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதா? இப்படியான கேள்விகளுக்கு விறுவிறுப்பாய் கடக்கும் திரைக்கதையில் பதில்கள் கிடைக்கின்றன. தன் மகனை கதாநாயகனாக்கி, படத்தை இயக்கியிருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் ஜாலி பாஸ்டியன்.
கதைநாயகனாக, சோதனை மேல் சோதனை அனுபவிக்கிற பாவப்பட்ட மனிதனாக விஹான். பெரும்பாலான காட்சிகளில் படபடப்பு, பரிதவிப்பு, இயலாமை, அழுகை என உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் ஓரளவு கவனிக்கும்படி நடித்திருப்பவர், சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்தும் சீற்றம் கெத்து!
நாயகனின் மனைவியாக சஹானா. காதலனுடன் வாழ்க்கையில் இணைவதற்காக அப்பாவிடம் மோதும்போது காட்டும் துணிச்சல், குழந்தையின் சிகிச்சைக்காக அல்லாடும்போது காட்டும் தவிப்பு என அவரது நடிப்புப் பங்களிப்பு கச்சிதம்!
இரண்டாம் கதாநாயகியாக, நெகுநெகு உயரத்துடன் வாளிப்பாக தேகத்துடன் நேகா. அப்பா வயதிலிருக்கும் கோடீஸ்வரர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அந்த சுகம் கிடைக்காத விரக்தி, குழந்தைக்கு ஆசைப்பட்டு அதற்கும் வழியில்லாததால் சுமக்கும் வேதனை என உணர்வுகளை உணர்ச்சிகளை நடிப்பில் கொண்டு வந்திருப்பது நேர்த்தி!
நாயகியின் அப்பாவாக ஜாலி பாஸ்டியன், இன்னொரு நாயகியின் கணவராக முகேஷ் ரிஷி, இன்னும் எம்.எஸ்.பாஸ்கர், பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், குழந்தை நட்சத்திரம் திரிஷ்யா என ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்ற பாத்திரங்களுக்கு முடிந்தவரை உயிரூட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிற ஜேசி கிஃப்ட், பாடல்களில் இதமூட்டியிருக்கிறார்.
கதைக்களத்துக்கு உரிய உழைப்பை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.எச்.தாஸ்.
கொரோனா காலகட்டத்தை கதைக்குள் கொண்டு வந்தது படத்துக்கு தலைப்பு வைக்கப் பயன்பட்டிருக்கிறது. மற்றபடி லாக்டவுண் தொடர்பான காட்சிகள் மனதில் தாக்கத்தை உருவாக்கத் தவறியிருக்கின்றன.
எடுத்துக் கொண்டிருப்பது ‘அந்த’ மாதிரியான கதைக்கரு என்றாலும், காட்சிகள் அளவுக்கு மிஞ்சாமலிருப்பதால் முகச்சுளிப்புக்கு அவ்வளவாய் வேலையில்லை!