யோகிபாபு, ரேச்சல் ரேபேக்கா, வீரா, அப்துல், அமித் பார்கவ், மாஸ்டர் சாத்விக் உள்ளிட்டோர் நடித்து, பாலாஜி வேணுகோபால் இயக்கி, வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘லக்கிமேன்.’ இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 29.08.2023 அன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியபோது, “இதற்கு முன்பு நான் ‘பானிபூரி’ என்ற வெப் சீரிஸ் இயக்கியிருந்தேன். அதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபுவை பார்த்து கதை சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அவர் ‘என் வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல உள்ளது’ என உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். அவரை தமிழ் நடிகர் என சொல்வது குறைவான மதிப்பீடு. இந்திய நடிகர் என சொல்லும் அளவுக்கு திறமையானவர்.
அவர் வீட்டில் ஒருவருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி எனும் போது கூட ஷூட்டிங் வீணாகக் கூடாது என அந்த கஷ்டத்தை மறைத்து எங்களுக்கு நடித்துக் கொடுத்தார்.
என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. அவர்கள் எனக்கு உதவிய இயக்குநர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் மட்டுமில்லாது தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினர். ஷான் ரோல்டன் என்றாலே மனம் கவரும் ட்யூன் தான். சிறப்பாக செய்துள்ளார். சுஹாசினி சின்ன ரோலாக இருந்தாலும் எனக்காக நடித்துள்ளார். படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சாருக்கு நன்றி. நண்பர்கள், குடும்பத்தினர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி” என்றார்.
படத்தின் நாயகன் யோகிபாபு, “இந்த படத்தின் கதை என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போல்தான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போல்தானே? அதைக் கேட்டதால்தான் பிரச்சினை. நான் ஷூட்டிங் வராமல் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் நடிப்பதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் நடிக்கிறேன். இந்த படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக பங்களிப்பை செய்துள்ளனர்” என்றார்.
படத்தில் யோகிபாபுவின் மகனாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாத்விக், “ஷூட்டிங் ஸ்பாஃட் ஜாலியாக இருந்தது. யோகிபாபு, ரேச்சல் அக்காவுக்கு நன்றி” என்றான்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “இது மிகவும் அருமையான படம். இந்தப் படம் பார்க்கும்போது ‘குட்நைட்’ பார்ப்பது போல இருந்தது என பலரும் சொன்னார்கள். என்னைக் கேட்டால், யோகிபாபு சாருக்கு ‘மண்டேலா’வுக்கு பிறகு ‘லக்கிமேன்’ என சொல்வேன். சிறந்த நடிகர் அவர். பாலாஜி வேணுகோபால் சார் சிறந்த இயக்குநர். படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.
படத்தில் கதைநாயகனின் மனைவியாக நடித்துள்ள ரேச்சல் ரெபேக்கா, நண்பனாக நடித்துள்ள அப்துல், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வீரா, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர் மதன், காஸ்ட்யூம் டிசைனர் நந்தினி நெடுமாறன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.