முழுக்க முழுக்க புதிய மலையாள திரைக் கலைஞர்களைக் கொண்டு, ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள படம் ‘லீச்.’
எஸ்.எம். எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்தில் நடித்திருக்கும் நிஜாம் பல குரல்களில் பேசி, திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிக்க வைத்தார்.
அதையடுத்து நிகழ்வில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான அனூப்ரத்னா, “நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் சினிமா தான் எனது இலக்காக இருந்தது. புதிய புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு, கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.
முதலில் எந்த மாதிரியான படம் எடுப்பது என்று யோசித்தோம். பிறகு ஒரு ஆக்சன் த்ரில்லர் வகையிலான படம் எடுப்பதற்கு முடிவு செய்தோம்.
லீச் என்றால் அட்டைப்பூச்சி, அது நமக்குத் தெரியாமலேயே நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது. அதை நாம் கவனிக்காமல் விட்டால் கடித்து ரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கூடவே இருப்பார்கள். ஒருவனுக்கு அருகே இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் யார் நல்லவர்? யார் கெட்டவர் ? என்று பார்த்தால் தெரியாது, ஆனால் ரத்தத்தை உறிஞ்சக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுதான் கதையின் அடிப்படை” என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன் “இந்த படத்தை அழகாக எடுத்திருக்கிறார்கள். கேரளாவில் இருந்து தமிழை நம்பி வந்திருக்கிறார்கள். தமிழையும் தமிழர்களையும் நம்பி வந்தால் எதுவும் தவறாகப் போகாது” என்றார்.
இயக்குநர் பேரரசு “இன்று நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டைகளாகி வருகிறார்கள். நம்மிடம் ரத்தம் இருக்கும் வரை அட்டைப் பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சும்.
இந்த படத்தில் மூன்று பாடல்களுமே நன்றாக உள்ளன. இது மாதிரியான பாடல் வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. இப்போது வந்துள்ளது. அந்தாதி ரகத்தில் ஒரு பாடல் வந்துள்ளது. எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள். தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்” என்றார்.