குடும்பத்தோடு பார்த்து ரசிக்க யோகிபாபு, தினேஷ் மாஸ்டர் நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’ ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ்!

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டது, என்ற குறையை போக்கும் வகையில் நல்ல மெசஜ் சொல்லும் நகைச்சுவை கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது ‘லோக்கல் சரக்கு.’

பிரபல நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபுவும் நாயகியாக உபாசனாவும் நடித்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால், அந்த குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

கிளைமாக்ஸ் பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

குடும்ப கதையை காமெடியாகவும் பெண்கள் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் விதமாகவும் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிரைலரில் இடம் பெற்றிருந்த தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபு கூட்டணியின் காமெடி காட்சிகளும், பாடல் காட்சிகள் கதையோடு பயணிக்கும் வகையில் படமாக்கப்பட்ட விதம் போன்றவை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. படம் நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி, நல்ல கருத்து சொல்லும் குடும்ப படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.

’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அவர் இந்த படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம்.

’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் ஒரு குத்து பாடல்கள் மற்றும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளது. பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட் பாடலாகவும் அமைந்துள்ளது.

கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்திருக்கிறார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். முஜ்பூர் ரகுமான் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here