காதலை மையப்படுத்தி, மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரிணி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘லவ்வர்.’
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. படக்குழுவினரோடு இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், பட விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பிரபுராம் வியாஸ் பேசியபோது,“2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு போன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா? எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்த கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்த கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை புரிந்து.. அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றி பேசியபோது, என்னுடைய எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி.
நானும், மணிகண்டனும் இணைந்து இந்த கதையை ஏராளமான பட நிறுவனங்களிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறோம். அதன் பிறகு ஒரு நாள் ‘குட் நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் மணிகண்டன் போன் செய்து, ‘உங்களுடைய கதையை குட்நைட் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் உணர்வு பூர்வமாக கதையைக் கேட்டு உங்களை சந்திக்கவேண்டும்’ என்றார். உடனே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனை சந்தித்தேன். அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.
நான் எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றியதில்லை.. இந்த படத்தில் அது தொடர்பான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டேன்.
இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு செல்லும்போது மனதில் சுமந்து செல்லும்படி இருக்கும்” என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசியபோது,“இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை’ என்றேன். படத்தை இயக்கியதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
இந்தஅதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் அம்சங்கள் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர். படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர். இந்த படம் உங்களை டிஸப்பாயின்ட் பண்ணாது” என்றார்.
பட விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி வேலன் பேசும்போது, ”இந்த படத்தின் டிரெய்லரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. மணிகண்டன் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்லும் தகுதியும், திறமையும் பெற்ற நடிகர். ஒரு சாதாரண காட்சியைக் கூட தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமை கொண்டவர்
‘லவ் டுடே’ எப்படி வெற்றி பெற்று வரலாறு படைத்ததோ அதை விட கூடுதலாக வசூலித்து இந்த படம் சாதனை படைக்கும்” என்றார்.
நடிகர் கண்ணா ரவி, நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா, இசையமைப்பாளரும் பாடகருமான ஷான் ரோல்டன், தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பஸ்லியான், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்ற, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.