பேங்க் கேஷியராக துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கடந்த 12 வருடங்களாக தனது நடிப்பின் மூலம் பெரும் பெயரையும் புகழையும் பெற்றுள்ள துல்கர் சல்மான், ரசிக்கக்கூடிய நல்ல படங்களைக் கொடுத்து வரக்கூடிய சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

தன்னுடைய கதை மற்றும் படத்தின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் விரும்பும்படி தனித்துவமாக கொடுத்து வரக்கூடிய இயக்குநர் வெங்கி அட்லூரி, ஒரு வங்கி காசாளராக துல்கர் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கியுள்ளார்.

துல்கர் சல்மான் நடிகராக 12 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வங்கியில் பணிபுரியும் பேங்க் கேஷியராக துல்கர் சல்மான் உள்ளார். மகதா வங்கியில் பணிபுரியும் ஒரு வங்கி காசாளராக துல்கரின் தோற்றம் இதில் உள்ளது. துல்கரின் நடிப்பு மற்றும் போஸ்டர் டிசைன் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யமூட்டக் கூடியதாக அமைந்துள்ளது. இப்படம் 80களின் காலகட்டமான பாம்பே (தற்போதைய மும்பை) பின்னணியைக் கொண்டது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்தக் கதை ஒரு எளிய மனிதனின் பயணத்தைப் பற்றியது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், ஒரு எளிய மனிதனின் ஒழுங்கற்ற லட்சியம், ஆபத்து மற்றும் சூழ்நிலையில் இருந்து தப்பித்தல் ஆகியவையும் இந்தக் கதையில் உள்ளது எனக் கூறியுள்ளனர். பம்பாயில் 80களின் நிதி நெருக்கடியான காலத்தில், ஒரு காசாளரின் வாழ்க்கை பெரும் கொந்தளிப்பில் செல்கிறது. துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரி இந்த தனித்துவமான கதையை தங்களது ஸ்டைலில் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வருகிறது. வெங்கி அட்லூரி இதற்கு முன்பு இயக்கிய ‘சார்/வாத்தி’ படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு போலவே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகளையும் அவர்கள் பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள். நிச்சயமாக, ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக்குழுவினர் உறுதியளிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘சார்/வாத்தி’ போன்ற மறக்கமுடியாத ஆல்பத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் – வெங்கி அட்லூரி கூட்டணி ’லக்கி பாஸ்கர்’ படம் மூலம் மீண்டும் ஒரு அற்புதமான ஹிட் ஆல்பத்தைக் கொடுக்க உள்ளனர்.

ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவுடன் இணைந்து சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி இப்படத்தை தயாரிக்கிறார். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. நடிகை மீனாட்சி செளத்ரி நாயகியாக நடிக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.

படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here