Home விமர்சனம் லவ் மேரேஜ் சினிமா விமர்சனம்

லவ் மேரேஜ் சினிமா விமர்சனம்

‘கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு குளுகுளு எண்டெய்ன்மெண்ட்’ என நினைத்து எடுத்துள்ள இந்த லவ் மேரேஜ் எப்படி இருக்கு?

33 வயது வரைக்கும் மணப்பெண் கிடைக்காமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார் ஹீரோ விக்ரம் பிரபு. எப்போதுமே உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு மதிப்பிருக்காது என்பது கரகாட்டக்காரன் காலத்திலிருந்தே நிகழ்ந்து வரும் வரலாறு. அதைப் போலவே விக்ரம்பிரபுவை மதுரை ஏரியாவில் யாரும் மதிக்கவில்லை. அதனால் கோபிச் செட்டிப்பாளையத்தில் அவருக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். கதை நடப்பது 2020-ல். ஆக நிச்சயம் செய்யப்போன இடத்தில் லாக்டவுனில் மாட்டிக்கொள்கிறது ஹீரோ குடும்பம். இதுவொரு கொடுமை என்றால் விக்ரம் பிரபு தலையில் இடி விழுவது போல மணப்பெண் இன்னொருவரோடு ஓடி விடுகிறார். அதன்பின் என்னென்ன நிகழ்கிறது என்பதே படத்தின் கதை

கதையின் நாயகனாக விக்ரம் பிரபு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். இந்தக் கதைக்கு அவரது நடிப்பு போதுமானதாக இருக்கிறது. ஆக்‌ஷுவலா படத்தில் இரு நாயகிகள்! சுஷ்மிதா பட் கொடுத்த வேலையாக அமைதியாக கவலை தோய்ந்த முகத்தோடு செய்துள்ளார். இன்னொரு துருதுரு நாயகி படமெங்கும் பாசிட்டிவிட்டியைப் பரப்பிக்கொண்டே இருக்கிறார். அருள்தாஸ் மிரட்டலான மாமாவாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், கோடங்கி வேல்முருகன், கஜராஜ் உள்பட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்

ஷால் ரோல்டன் இசையில் பாடல்கள் ஈர்த்த அளவிற்கு பின்னணி இசை ஈர்க்கவில்லை. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. பெரும்பாலும் வீட்டிற்குள்ளே நடக்கும் காட்சிகளை போரடிக்காத ப்ரேமிங்கால் அழகாக்கியுள்ளார்

முதல்பாதியில் கலகலவென நகரும் கதை, இரண்டாம் பாதி காதல் எபிசோடில் சின்னதாக டல்லடிக்கிறது. க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் அந்த டல்னெஸை ஜில்னெஸ் ஆக்கிவிடுகிறார் இயக்குநர் சண்முகபிரியன்

லாக்டவுன் மேரேஜ் என்பதால் நிறைய கண்டிஷன் அப்ளேஸ் இருக்கிறது. இருப்பினும் லவ் என்றாலும் மேரேஜ் என்றாலும் ஒரு பாசிட்டிவிட்டி வருமில்லியா? அதனால் ஒகே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்