போலீஸாக உடலை முறுக்கிக் கொண்டு வர மூன்று மாதம் நேரம் கேட்டேன்! -லாந்தர் பட விழாவில் நடிகர் விதார்த் பேச்சு

விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, ஷாஜி சலீம் இயக்கத்தில் ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘லாந்தர்.’ இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடந்தது.

படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஷாஜீ சலீம் பேசும்போது, ”முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் ஐம்பது சதவீத சுமை குறைந்து விடும். ஏனெனில் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார். அவரிடம் படபிடிப்பு தளத்தில் காட்சிகளையும், வசனங்களையும் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நம்பகத்தன்மையுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சில வரிகளில் தான் விவரித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் எதிர்பார்த்ததை விட அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் வியந்து விட்டேன்.‌ இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விதார்த் பேசும்போது, ”நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும்.‌

பாடலாசிரியர் தேவாவிற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நான் ஏராளமான தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்ரி போன்ற ஒரு தன்னடக்கம் மிகுந்த மனிதரை சந்தித்ததில்லை.‌ பார்ப்பதற்கு எளிமையான மனிதராக இருந்தாலும் அவர் பெரிய ஆள். இவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான். சினிமா மீது இவர் வைத்திருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.‌ ஏனெனில் இவர் ‘லாந்தர்’ படத்தின் மூலம் வெற்றியை பெற்றால் தொடர்ந்து படங்களை தயாரிப்பார்” என்றார்.

படத்தின் நாயகி ஸ்வேதா டோரத்தி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ விஷ்ணு, படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here