சைக்கோ கொலையாளியை துரத்திப் பிடிக்கும் போலீஸ். லாந்தர் விளக்கின் வெளிச்சம்போல் படத்தின் ஒன்லைன் வெரி வெரி சிம்பிள்.
அரவிந்த் நேர்மையான, துணிச்சலான போலீஸ் உயரதிகாரி. அவர், நகரத்தில் திடீரென தோன்றி ஒருசில கொலைகளைச் செய்கிற, போலீஸாரை கொடூரமாகத் தாக்குகிற மர்ம மனிதனை வளைத்துப் பிடிக்கும் பொறுப்பை ஏற்கிறார். அதன் மூலம் சிலபல சிக்கல்களைச் சந்திக்கிறார். அதையெல்லாம் சமாளித்து அவரால் மர்ம மனிதனை பிடிக்க முடிந்ததா? அந்த மர்ம மனிதன் யார்? அவன் யாரை கொலை செய்கிறான்? அதற்கான பின்னணி என்ன?
கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள் என எல்லாவற்றுக்கும் தனது திரைக்கதையில் விடை தருகிறார் இயக்குநர் சாஜி சலீம்.
அரவிந்தாக விதார்த். ஆரம்பக் காட்சியில் பெரும் செல்வாக்கு மிகுந்த போலி மதுபானங்கள் தயாரிக்கும் நபரை கைது செய்வதில் காட்டும் அதிரடி சற்றே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. கொலையாளியைத் தேடுதல், கொலையாளியிடம் அவரது மனைவியே சிக்குதல், அவரை மீட்கப் போராடுதல் என தொடரும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கம்பீரம் காட்டியிருக்கலாம்.
விதார்த்தின் மனைவியாக அழகும் இளமையும் நிரம்பித் ததும்புகிற ஸ்வேதா டோரத்தி. மிக்ஸி சத்தத்துக்கே பயந்துபோய் மயக்கமடைந்து விடுகிற பிரச்சனைக்கு ஆளான பாத்திரத்தில் அதற்கேற்ற பய உணர்ச்சியை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார்.
காதலின் இனிமையை, சைக்கோத் தனத்தின் குரூரத்தை முகபாவங்களில் சரியாக கொண்டு வந்திருக்கிறார் சஹானா.
சஹானாவின் தந்தையாக பசுபதி ராஜ், காதல் கணவனாக வருகிற விபின், டாக்டராக கஜராஜ் என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு நேர்த்தி.
எம் எஸ் பிரவீனின் பின்னணி இசை கதைக்களத்திற்கு சுறுசுறுப்பைத் தர, கச்சிதமான ஒளிப்பதிவால் காட்சிகளை தரம் உயர்த்தியிருக்கிறது ஞான செளந்தரின் கேமரா.
கதையின் ஒன்லைனை பரபரப்பாக யோசித்த இயக்குநர், காட்சிகளிலும் அந்த பரபரப்பைக் கொண்டு வந்திருந்தால் லாந்தர் கூடுதலாய் புகழ் ‘வெளிச்சம்’ தந்திருக்கும்.