‘லைசென்ஸ்’ சினிமா விமர்சனம்

சினிமாக்களில் விதவிதமான புதுமைப் பெண்களை பார்த்த நமக்கு, இதுவரை திரையில் பார்க்காத ‘உரிமத்தோடு துப்பாக்கி தூக்கும் உரிமைக்காக போராடும் புதுமைப் பெண்’ணை காண்பித்திருக்கிற படம்.

காவல்துறை உயரதிகாரியொருவரின் மகள் பாரதி. பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அவர், பாரதி சொன்னபடி ரெளத்ரம் பழகியவராக, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளைக் கண்டு கொதிப்பவராக இருக்கிறார். நெருங்கிய தோழி தன் கண் முன்னே பாலியல் வன்முறைக்கு ஆளானதைப் பார்த்த அனுபவமும் அவருக்கிருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் பாதுகாப்புக்காக என்று சொல்லி துப்பாக்கி பயன்படுத்த ‘லைசென்ஸ்’ கேட்டு விண்ணப்பிக்கிறார்.

மீடியாக்களில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. பாரதி சிங்கப் பெண்ணாய் மாநிலம் முழுக்க பிரபலமாகிறார். போலீஸ் தரப்பில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட விவகாரம் நீதிமன்றத்தில் நுழைகிறது. அங்கு அவருக்கு லைசென்ஸ் கிடைத்ததா இல்லையா என்பதே கதையோட்டம்…

நீதிமன்றக் காட்சியில், பெருகி வரும் பாலியல் பலாத்காரத்தைக் கட்டுப்படுத்த சட்ட அமைச்சர் செயல்படுத்தப் போவதாக சொல்கிற திட்டத்தில் இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய சங்கதியிருக்கிறது. இயக்கம் கணபதி பாலமுருகன்

கதையின் நாயகியாக பாடகி ராஜலெஷ்மி செந்தில். பாரதியின் பெயரைச் சுமந்து, பாரதி சொன்னபடி நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் அறிமுகப் படத்திலேயே காட்சிக்கு காட்சி கம்பீரம் காட்டுகிற கனமான வேடம்.

அப்பா மீதான நியாயமான கோபத்தால் வருடக்கணக்கில் பேசாமலிருப்பது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தரப்புக்கு சட்டரீதியாகவும் மனதளவிலும் தோள் கொடுப்பது, தன் செயல்பாடுகளுக்கு எதிரான மனநிலையிலிருக்கும் கணவரை பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் சமாளிப்பது, அதட்டல் மிரட்டலால் தன்னை அடக்க நினைக்கும் போலீஸ் அதிகாரியை துணிச்சலாக எதிர்கொள்வது என எல்லா உணர்வுகளையும் சற்றே இறுக்கமான முகபாவத்தில் வெளிக்காட்டியிருக்கிறார். அவர் ஏற்ற பாத்திரத்துக்கு அது பொருத்தமாகவும் போதுமானதாகவும் இருக்கிறது. அழுத்தமான வேடங்களை நம்பிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையும் தருகிறது!

அப்பா வேடத்தில் ராதாரவி. அவரிடமிருந்து வழக்கம்போல் நேர்த்தியான நடிப்பு!

கதாநாயகியின் பருவவயது பாத்திரத்தை ஏற்றுள்ள ‘அயலி’ அபிநக்ஷத்ரா, தன் தந்தையிடம் ‘செய்ற வேலைக்கு நியாயமா இல்லாத நீயெல்லாம் போலீஸா?’ என்பதுபோல் சீற்றம் காட்டுமிடம் சிறப்பு

கதாநாயகியின் சிறுவயது பாத்திரத்தை ஏற்றிருக்கிற சிறுமியின் பெரிய கண்கள் வசனம் பேசும்போது இன்னும் பெரிதாய் விரிவது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கிடைத்திருக்கிற வீரியம்!

சட்ட அமைச்சராக வருகிற பழ கருப்பையாவின் பகட்டான நடிப்பு, நீதிபதியாக வருகிற கீதா கைலாசத்தின் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம்!

தெனாவட்டுப் பார்வையால் எதிராளியை வெட்டிப் போடுகிற அதே காவல்துறை அதிகாரி வேடம் சேரன் ராஜுக்கு. அதை சரியாய் செய்திருக்கிறார்!

அப்படி வந்து இப்படி போகிற சிறிய பாத்திரம்தான் என்றாலும் வழக்கமான வெட்டி பந்தா ஆசாமியாக, அரசியல்வாதியாக ரசிக்க வைக்கிறார் நமோ நாராயணன்!

விஜய் பாரத், ஜீவா ரவி, தீபா சங்கர், பாண்டியக்கா, தன்யா அனன்யா என இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு!

படத்தின் தயாரிப்பாளர் என் ஜீவானந்தம் முக்கிய வேடத்தில் வருகிறார்.

‘நம்மால ஒரு விஷயம் முடியாதுன்னா அத பத்தி யோசிக்கக்கூடாது, நம்மால ஒரு விஷயம் முடியும்னா எத பத்தியும் யோசிக்கக்கூடாது’, வன்முறைய சகிச்சுக்க சொல்றதும் வன்முறைதான்’… வசனங்களில் அனல் பறக்கிறது.

பைஜூ ஜேக்கப் இசையில், கதையின் நாயகி பள்ளிக் குழந்தைகளோடு ஆடிப்பாடுவதாய் வருகிற ‘குட்டிக் குட்டி கனவுகளே’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது. நட்பின் ஆழத்தை சொல்கிற ‘என் நிழலும் நீ, நிஜமும் நீ’ பாடல் மனதுக்கு இதம் தந்து கடந்துபோகிறது.

ஒளிப்பதிவு கச்சிதம்!

படத்தின் பின்பாதி முழுக்க நீள்கிற நீதிமன்ற விவாதக் காட்சிகள் சற்றே சலிப்பு தந்தாலும், நிஜத்தில் நடக்காத விஷயங்களை சினிமாவில் சாத்தியமாக்கிக் காட்டுகிற வழக்கமான பாதையிலிருந்து விலகி உண்மைக்கு நெருக்கமாய் முடித்திருப்பது ஆறுதல் தருகிற சங்கதி!

சில காட்சிகளின் சினிமாத்தனங்களை தவிர்த்துப் பார்த்தால், லைசென்ஸுக்கு வேலிடிட்டி அதிகம்!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here