சரக்குப் பழக்கம் ஒருவனை எந்த நிலைக்கு இழுத்துச் செல்லும், எதையெல்லாம் இழக்கச் செய்யும் என்பதை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டும் சமூக அக்கறை சார்ந்த படங்களில் வரிசையில், கமர்ஷியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் மிக்ஸான ‘லோக்கல் சரக்கு.’
எந்த வேலைக்கும் போகாமல் நாள் முழுக்க குடிப்பது, குடிப்பதற்காக கண்டதையும் விற்பது, போதைக்காக போவோர் வருவோரிடமெல்லாம் கடன் வாங்குவது என பொறுப்பின்றித் திரியும் அந்த இளைஞனின் வாழ்வில், திடுதிப்பென ஒரு பெண் நுழைகிறாள். விசாரித்ததில் அவன் அவளுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டது தெரியவருகிறது.
அவனுக்கு, அவளை யாரென்றெ தெரியவில்லை.
அந்த பெண் சொல்வது உண்மை என்கிறபோது அவனது கடந்தகாலத்தில் அவனுக்கே தெரியாமல் ஏதோவொரு சம்பவம் நடந்திருக்கும்தானே? அந்த சம்பவம் என்ன என்பதை விவரிக்கிறது சுவாரஸ்யமான திரைக்கதை… இயக்கம்: எஸ்.பி.ராஜ்குமார்
புதர்போல் வளர்ந்த தாடி மீசைக்குள் புதைந்துபோய், அப்பாவித்தனத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போன்ற தோற்றத்திலிருந்தாலும் குடிப்பதற்காக அடப்பாவியாய் மாறுகிற எக்குத்தப்பான பாத்திரத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.
காதலர்கள் கட்டிப்பிடித்து சூடாவதற்கு வசதியாக ஏடிஎம்மின் ஏசி ரூமை வாடகைக்கு விட்டு பணம் வாங்கி குடிப்பதாகட்டும், திடுதிப்பென தன் வீட்டில் நுழைந்து மனைவிக்கான உரிமையை எடுத்துக் கொள்கிற பெண்ணிடம் ஒத்துப்போகாமல் திணறுவதாகட்டும், மது வாசனையே பிடிக்காத பயங்கர அலட்டல் பேர்வழியான நடிகர் மீது குடித்துவிட்டு வாந்தியெடுத்து குமட்டலை வரவைப்பதாகட்டும், கஸ்டமர் ஆர்டர் செய்த பிரியாணியை சைடிஷாக்கி சரக்கடிப்பதாகட்டும், மனைவிக்கு லெமன் ஜூஸ் குடிக்கக் கொடுத்து ஊறுகாய் பாக்கெட்டை பிரித்து நீட்டி அசடு வழிவதாகட்டும், தன் மனைவியை அடைய நினைக்கிறான் என்பது புரியாமல் அயோக்கியன் ஒருவனை நல்ல நண்பனாக கருதி ஆபத்தை சந்திப்பதாகட்டும் காட்சிகளுக்கேற்ப நகைச்சுவை, பரிதாபம், இயலாமை, விரக்தி என அனைத்து உணர்வுகளையும் இயல்பு மீறாத நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
பாரின் விஸ்கி பாட்டில் போல் அழகான வளைவு நெளிவுகளுடன் இருக்கிற ஐட்டம் டான்ஸ் அம்மணியுடன் போடும் குத்தாட்டத்தில், குலுக்கிவிட்டு திறந்த பீர் பாட்டில்போல் உற்சாகம் பொங்கி வழிகிறது!
துணை நடிகையாக சிறியளவில் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகி உபாசனா, கொரோனா காலகட்டத்தில் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக திடீரென சினிமாத்தனமான திருமண பந்தத்தில் நுழைவது, பின் அந்த பந்தத்தை வாழ்நாள் முழுக்க தொடர விரும்புவது, கணவனின் போக்கிலேயே போய் அவனை நல்வழிப்படுத்துவது, தன்னை நிர்வாணமாய் வீடியோ எடுத்தவனை வித்தியாசமான முறையில் துணிச்சலாக தண்டிப்பது என அழுத்தமான பாத்திரத்திற்கு அழகான அளவான நடிப்பால் உயிரோட்டம் தந்திருக்கிறார்.
ஹீரோவோடு சேர்ந்து குடிப்பதற்கும், சின்னச்சின்ன விஷயங்களால் சிரிக்க வைப்பதற்குமாக யோகிபாபுவின் கால்ஷீட் பயன்பட்டிருக்கிறது. தான் குறிவைக்கும் பெண், நண்பனின் மனைவியானது தெரியாமல் காதல் பார்வை வீசி பல்பு வாங்குமிடம் ரகளை!
தன்னை அஜித், விஜய் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு சாம்ஸ் செய்யும் அலப்பரை அட்டகாசம் கணிசமான கலகலப்புக்கு உத்தரவாதம்!
பாசமும் அக்கறையும் கலந்துபரிமாறும் மாமனாக இமான் அண்ணாச்சி, நாயகிக்கு தோழியாக வினோதினி, இலவச திருமணத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜென்டாக சிங்கம்புலி என மற்ற நடிகர் நடிகைகளின் நடிப்பு கச்சிதம்.
பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டுகிற வில்லனின் நடிப்பில் கெத்து கம்மி!
‘கண்ணால மயக்குறீயே செம கட்டையா; முன்னால சாஞ்சிப்புட்டேன் வாழ மட்டையா’, ‘லிக்கர் பாட்டில் ஒண்ணுடா’ பாடல்களுக்கு வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் போட்டிருக்கும் இசையில் துடிப்பும் துள்ளலும் அதிகம்!
கே.எஸ்.பழநியின் ஒளிப்பதிவு நேர்த்தி!
மதுவுக்கு அடிமையாவதால் ஏற்படும் சீரழிவுகளை விவரிப்பதோடு கடமையை முடித்துக் கொள்ளாமல்,
அந்தரங்க தருணங்களை வீடியோ எடுக்கும் சைபர் குற்றவாளிகளை, பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எடுத்துச் சொல்லியிருப்பது நல்ல முன்னுதாரணம்!
லோக்கல் சரக்கு – காட்சிகளில் போதையும் அதிகம்; காட்டிய பாதையில் தெளிவும் அதிகம்!