‘லவ்வர்’ சினிமா விமர்சனம்

‘பக்குவமில்லாத உள்ளத்திலிருந்து உருவாகும் காதலுக்கு ஆயுள் குறைவு’ என்பதை எடுத்துச் சொல்ல களமிறங்கி, இளைய தலைமுறையின் விருப்பு வெறுப்புகளால் நிகழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார சீரழிவை உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டியிருக்கும் ‘லவ்வர்.’

அந்த இளம்பெண் ஆறாண்டுகள் தன்னைக் காதலித்தவனுடன் மணவாழ்க்கையில் இணையலாம் என்று நினைக்கும்போது, அவனுடன் ஓராண்டுகூட வாழ முடியாது என்ற முடிவுக்கு வர வைக்கிறது அவனது நடவடிக்கைகள். அப்படி அவன் என்னதான் செய்கிறான்? அவர்களின் காதல் என்னவானது? இப்படி படத்தின் கதைக்களம் வெரி வெரி சிம்பிள்.

அப்படியான கதையை எடுத்துக்கொண்டு இன்றைய இளைய தலைமுறைக்கு இருக்கிற சுதந்திரம், பழக்கவழக்கம், அவர்கள் அனுபவிக்கும் விஷயங்கள், நல்லது கெட்டது யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் என பலவற்றையும் திரட்டி திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

நேரங்காலம் பார்க்காமல் குடிப்பது, கஞ்சா போதையில் மிதப்பது என எக்குத்தப்பான பாத்திரத்தில் மணிகண்டன். அதையெல்லாம் சரியாக செய்திருப்பவர் காதலி எதை செய்தாலும் தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என எதிர்பார்ப்பது, அவள் அங்குபோனால் தப்பு, இங்கு போனால் குற்றம் என்று கழுகுப் பார்வையில் கண்காணித்து அவளை வார்த்தைகளால் வறுத்தெடுப்பது, உடனடியாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, மீண்டும் அதே தவறை தயங்காமல் செய்வது என தனது செயல்பாடுகளில் மெல்லிய சைக்கோத்தனம் காட்டி ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். படித்த படிப்புக்கேற்ற வேலைக்குப் போவதில் விருப்பமில்லாமல் சொந்த தொழில் தொடங்கும் ஆர்வத்திலிருப்பது, அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவது என நல்லவிதமாக நடிப்பதற்கும் வாய்ப்பிருக்க அடித்து ஆடியிருக்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது காதலியின் உடலோடு உறவாடுகிற எபிசோடுகளும் உண்டு!

எதை செய்வதாக இருந்தாலும் தன்னிடம் சொல்லிவிட்டுச் செய்யவேண்டும், தான் விரும்புவதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற தன் காதலனின் எதிர்பார்ப்புக்கு எதிரான மனநிலையில் நாயகி ஸ்ரீகெளரி. தான் காதலிக்கும் நபர் பொறுப்பற்றவனாக, போதையின் பிடியில் சிக்கியவனாக இருந்தாலும் அவன் இன்று திருந்துவான் நாளை திருந்துவான் என நம்பி அவன் மீது கனிவு காட்டுவது, அவளது நம்பிக்கை நிறைவேற வாய்ப்பில்லை எனும்போது அவனிடமிருந்து விலக நினைப்பது, அதை செய்ய முடியாமல் தவிப்பது என படம் முழுக்க மன உளைச்சலை வெளிப்படுத்தும் முகபாவத்துடன் வந்தாலும் ஒவ்வொரு காட்சியும் அவருக்குள் இருக்கும் தேர்ந்த நடிகையை அடையாளம் காட்டியிருக்கிறது.

வில்லங்கமான கணவர்; விவகாரமான மகன் இருவருக்கிடையில் வாழ்நாளை கடத்துகிற பரிதாபமான பாத்திரத்தில் கதைநாயகனின் அம்மாவாக வருகிற கீதா கைலாசத்தின் நடிப்பு கச்சிதம்.

காதலனோடு தொடரும் சண்டை சச்சரவால் அவதிப்படுகிற நாயகியின் மனதுக்கு ஆறுதல் தருபவராக கண்ணா ரவி. இளமையும் லட்சணமும் பின்னிப் பிணைந்திருக்கிற, நேர்த்தியான நடிப்பால் கவர்கிற அவர் எப்போது வேண்டுமானாலும் வில்லன் அவதாரம் எடுப்பார் என்றபடி கடந்தோடுகிறது திரைக்கதை.

நாயகன் மணிகண்டனின் நண்பனாக அருணாச்சலேஸ்வரன், கண்ணா ரவியின் சிநேகிதிகளாக நிகிலா சங்கர், ரினி என இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நிறைவு.

உணர்வுகள் ஊற்றெடுக்கும் காட்சிகளை அதன் தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிற ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, பசுமை சூழ்ந்த மலைப்பகுதிகளை, ஆர்ப்பாட்டமில்லாத கடலோரத்தை அழகு குறையாமல் தன் கேமரா கண்களால் சுருட்டியிருக்கிறார்.

காட்சிகளுக்கு பின்னணி இசையால் முடிந்தவரை உயிரோட்டம் தந்திருக்கிற ஷான் ரோல்டன் கதையோட்டத்துக்கு பொருத்தமாக ஆறேழு பாடல்களையும் தந்திருக்கிறார்.

குடி போதை, புகை போதை என நீளும் காட்சிகள் சற்றே அதிகம் என்றாலும் அவை இன்றைய நடப்பு நிகழ்வுகளின் சான்றாக இருப்பதை மறுப்பதற்கில்லை. திருமணத்துக்கு முந்தைய உடல்ரீதியிலான உறவென்பது சகஜமாகிவிட்ட சூழலில் அதையெல்லாம் அப்படியே காண்பித்திருப்பதை குறை சொல்வதற்கில்லை.

லவ்வர் – உண்மைக் காதல் எதுவென உணர்த்தும் டீச்சர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here