‘போர்’ அடிக்காத சென்டிமென்ட், கேப் கிடைக்கிறபோதெல்லாம் சிரிப்பு ‘சிக்ஸர்’ என மட்டைப் பந்தை மையமாக வைத்து, ‘ரன்’னிங்கில் காதலையும் தொட்டுக்கொண்டு, அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ‘பிட்ச்’ உதறியிருக்கும் ‘லப்பர் பந்து.’
இளைஞன் அன்பு கிரிக்கெட் பிரியர்; நடுத்தர வயதுக்காரர் கெத்து கிரிக்கெட் வெறியர்.
கெத்தின் மனைவி, கணவனை கிரிக்கெட் விளையாடக்கூடாது என தடுத்துத் தடுத்து அலுத்துப்போய், ‘இனி கிரிக்கெட் விளையாடவே மாட்டேன்’ என்று சாமி மீது சத்தியம் செய்ய வைத்தவர். கிரிக்கெட் மீது அவருக்கு அந்தளவு வெறுப்பு.
இதெல்லாம் ஒருபக்கமிருக்க கிரிக்கெட் களத்தில் அன்பு, கெத்து இருவரும் மோதிக் கொள்ள, போட்டி மனப்பான்மை நீயா நானா என்ற ஈகோ யுத்தமாக மாறுகிறது, பகைத் தீ பற்றிக்கொள்கிறது.
கெத்து தனக்கு பகையாளியான பிறகுதான், அன்புக்கு தான் காதலிக்கும் பெண் கெத்தின் மகள் என்பது தெரிய வருகிறது.
தான் காதலிக்கும் பெண்ணின் அப்பா ஏற்கனவே தன்னை பகையாளியாக பார்ப்பவர். பெண்ணின் அம்மா கிரிக்கெட்டை வெறுப்பவர். அந்த பெண்ணோ அப்பா, அம்மா சம்மதமின்றி அன்புடன் மண வாழ்க்கையில் இணைய தயாராக இல்லை என்கிற சூழ்நிலை.
ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் மோதல். இப்படி சூடுபிடிக்கும் கதையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்,
அன்பு, கெத்து இருவரின் பகை தீர்ந்ததா?, அன்புவின் காதல் என்னவானது? என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி நகரும் கதையின் போக்கு அத்தனையும் சுவாரஸ்யம்…
கிரிக்கெட்டில் சாதிப்பது, காதலில் ஜெயிப்பது என இரண்டுமே போராட்டமாகிவிடுகிற சூழ்நிலையில், இரு பக்கமும் பக்குவமாக அடித்து ஆடி ‘அன்பு’க்கு பலம் அதிகம் என காட்டியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
புதர் போல் மண்டிக்கிடக்கும் தாடி மீசையில் நரை கூடிப்போய், கல்யாண வயதிலிருக்கிற பெண்ணுக்கு அப்பாவாக ‘அட்டகத்தி’ தினேஷை பார்க்கும்போது ‘அடடே என்னவொரு டிரான்ஸ்பர்மேஷன்?’ என ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தோற்றத்திலிருக்கும் முதிர்ச்சி நடிப்பிலும் ‘கெத்தாக’ வெளிப்பட்டிருக்கிறது. சாமியிடம் சத்தியம் செய்துவிட்டு அதே சாமியிடம் ‘சத்தியத்தையெல்லாம் கண்டுக்காத’ என கோரிக்கை வைப்பது ரகளை.
தமிழ் சினிமாக்களில் ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின் எதையெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் அளவாக அழகாக செய்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. ‘நீ சொல்லாம அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்; அவனைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என தன் அம்மாவிடம் வார்த்தைகளால் விளாசும்போது நிமிர்ந்து பார்க்க வைக்கிறார்.
என்ன சொன்னாலும் தன் வழிக்கு வராத கணவன், காதலில் உறுதியாக இருக்கிற மகள் என இருவரையும் சமாளிக்கும் விதத்தில் தனித்துத் தெரிகிறார் ஸ்வாசிகா விஜய்.
ஏற்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுகிற காளி வெங்கட்டுக்கு கதையில் முக்கியத்துவமிருக்கிறது. பால சரவணன், ஜென்சன் திவாகர் இருவரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்; சீரியஸான கதையோட்டத்திலும் கலக்கிறார்கள். அகம்பாவம் ஆணவம் என கலந்துகட்டி வெளுத்திருக்கிறார் டி எஸ் கே.
ஆதித்யா கதிரின் கிரிக்கெட் கமெண்ட்ரி கலகலப்புக்கு 100% கேரண்டி.
கதைக்களத்துக்கு உயிரோட்டம் தந்தவற்றில் ஷான் ரோல்டனின் பின்னணி இசைக்கு பெரிய பங்கிருக்கிறது. ‘சில்லாஞ்சிறுக்கியே’ பாடலில் கிறங்காமலிருக்க முடியாது.
ஒளிப்பதிவு தரம்
மைதானத்தில் ‘அட நீ சிங்கக் குட்டி’ என விஜய்காந்த் படப் பாடல் ஒலிப்பது தியேட்டரில் உற்சாகத்தைக் கிளப்புகிறது. விளையாட்டில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வை போகிறபோக்கில் எடுத்துக்காட்டியிருக்கும் இயக்குநர், கிளைமாக்ஸில் வைத்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது.
ஸ்போர்ஸ் டிராமா சப்ஜெக்ட் என்றால் போட்டி, பொறாமை, அரசியல் உள்குத்து என ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் உணர்வைத் தருகிற காட்சிகளே அதிகமாய் இடம்பிடிப்பது வழக்கம். அதை மாற்றி காதல், சென்டிமென்ட், கோபதாபம் என உணர்வுபூர்வமான திரைக்கதை படத்தை ஆக்கிரமித்திருப்பது தனித்துவம்.
லப்பர் பந்து, பந்தயத்தில் ஜெயித்த குதிரை!