நாட்டில் நடக்கும் நிதி சார்ந்த ஊழல்களை மையப்படுத்திய கதைக்களம். சிசிடிவி, மொபைல் போன் மட்டுல்ல; பேஜர் கூட புழக்கத்துக்கு வராத ஹர்சத் மேத்தா காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பிரதிபலிப்பாக ‘லக்கி பாஸ்கர்.’
நேர்மையான வங்கி அதிகாரி பாஸ்கரை, குடும்பச் சூழ்நிலை சிறியளவிலான பன மோசடியில் ஈடுபட வைக்கிறது. அதில் ருசிகண்ட பாஸ்கர் அதே குற்றச் செயலை விதவிதமாக செய்து உலகமகா பணக்காரனாகிறான்.
அவன் செய்யும் மோசடிகள் வங்கிகளில், பெரியளவிலான இறக்குமதி வர்த்தகங்களில், பங்குச் சந்தைகளில் எப்படியெல்லாம் ஊழல்கள் நடந்திருக்கின்றன, நடக்கின்றன என்பதை வெளிச்சம்போட்டுக் காட்ட, தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்க அவன் கையாளும் வழிகள் காட்சிகளாக விரிய, அவன் தப்பித்தானா இல்லையா என்பது மீதிக் கதை… இயக்கம் வெங்கட் அட்லூரி
பாஸ்கராக துல்கர் சல்மான். மனைவி, குழந்தை என தன் குடும்பத்தைக் கவனிப்பதோடு தந்தை, தம்பி, தங்கை என உறவுகளையும் அரவணைக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி பணத் தேவைக்காக அல்லாடுகிற ஆரம்பக் காட்சியில் எளிமையான நடிப்பைத் தந்திருப்பவர்,
பணம் சம்பாதிக்க ரூட் கிடைத்து அதில் பயணித்து வலிமையான மோசடிக்காரனாகும்போது டாப் கியரில் வேகமெடுக்கிறார். குற்றங்களைச் செய்யும் விதம் பரபரப்பைப் பற்ற வைக்க, அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக போடும் ஸ்கெட்ச் அத்தனையும் அதகளம் அட்டகாசம்.
வறுமையை பொறுத்துக் கொள்வதாகட்டும், வருமானத்துக்கு அதிகமாய் பணம் வரும்போது அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கணவனிடம் ஏன் எப்படி என கேள்வி கேட்பதாகட்டும், காலப்போக்கில் கோடீஸ்வர வாழ்க்கையை உற்சாகமாய் அனுபவிப்பதாகட்டும் துல்கரின் மனைவியாக வருகிற மீனாட்சி செளத்ரியின் நடிப்பு அவரைப் போலவே அத்தனை அழகு.
மிகச்சில காட்சிகளில் வருகிற ராம்கிக்கு கதையின் வேகப் பாய்ச்சலுக்கு ரிப்பன் நறுக்கிற வேலை. அதை ரிச்சாகச் செய்து பறந்துபோகிறார்.
வங்கி அதிபராக டினு ஆனந்த், வங்கியின் உயரதிகாரியாக மேத்யூ வர்கீஸ், சிபிஐ அதிகாரியாக சாய்குமார் என இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களில் ஒருவர் கூட நடிப்பில் குறைவைக்கவில்லை.
ஜன நெரிசல் மிக்க மும்பையை, மங்கலான வெளிச்சத்திலும் பளீரென படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி.
பீரியட் படமென்ற உணர்வை காட்சிகள் வழி கடத்துவதில் தனக்கிருக்கும் கடமையை உணர்ந்து உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் பங்லான்.
நான் லீனியர் பாணியில் முன்னும் பின்னுமாய் கடந்தோடும் கதையின் போக்கு ஆடியன்ஸை குழப்பிவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி.
திரைக்கதையின் சுறுசுறுப்புக்கு ஊக்க மருந்து செலுத்தியது போலிருக்கிறது ஜீ வி பிரகாஷின் பின்னணி இசை. பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை; கதையின் நகர்வுக்கு எவ்வித சங்கடமும் தரவில்லை.
முறையற்ற வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மூளைக்காரர்களாக இருக்கிற பட்சத்தில் நாட்டில் என்ன மாதிரியான மோசடிகள் அரங்கேறும் என்பதை விலாவாரியாக காட்டியிருக்கும் லக்கி பாஸ்கர், மேக்கிங்கில் ரசிக்க வைக்கும் திருட்டு ராஸ்கல்!