தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கத்தினரும் பார்ப்பதற்காக 14.7.2023 அன்று ‘மாமன்னன்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சங்கத்தின் தலைமை பொறுப்பிலுள்ள இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் லிங்குசாமி, எழில், சித்ரா லக்ஷ்மனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படத்தைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டி வாழ்த்தினார்கள்.
படம் பற்றி ஆர்.கே.செல்வமணி, “மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக இப்படி ஒரு படைப்பை தயாரித்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். நான் படத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் போன் செய்து வாழ்த்து கூறினேன். வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம். மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குநர் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்னையாக மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார். மாரி செல்வராஜை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை, அவரது உழைப்பு அபாரமானது. உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது பல படங்களைப் பார்த்து ரசித்திருப்போம். ஆனால் இந்த படம் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த படத்தை தந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
நிறைவாக, படத்தைப் பார்த்து பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கு படக்குழு சார்பாக உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்தனர்.