நான் நடித்ததில் இது பெஸ்டாக இருக்கும்! -‘மத்தகம்’ வெப் சீரிஸின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அதர்வா பேச்சு

ஹீரோவாக அதர்வா, வில்லனாக மணிகண்டன், நாயகியாக நிகிலா விமல் நடிக்க, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘மத்தகம்.’

இயக்குநர் கவுதம் மேனன், டிடி (திவ்யதர்ஷினி), தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷிகாந்த், முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அதையொட்டி மத்தகம் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் அதர்வா பேசியபோது, ‘‘மத்தகம் 2018, 19 காலகட்டத்தில் ஆரம்பிச்சது. கௌதம் மேனன் சார் தான் இயக்குநர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு.

முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவேனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட ரெண்டு நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர். அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்” என்றார்.

நடிகர் மணிகண்டன் பேசியபோது, ‘‘என்னுடைய சிறு சிறு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இந்த சீரிஸ் பொறுத்த வரை எனக்கு மிகவும் எதிர்பார்ப்புக்கு மீறிய கதாபாத்திரம். இந்த சீரிஸின் படப்பிடிப்பு இரவில்தான் அதிகம் நடைபெற்றது.

இந்த சீரிஸில் பல பல சிறு கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்கென தனி அடையாளத்தைக் கொடுத்துள்ளனர். படைப்பைப் பார்த்த பிறகு எங்களின் உழைப்பை விட இயக்குநரின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் எங்களுக்குத் தோன்றியது. கண்டிப்பாக உங்களுக்கும் இது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.

இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசியபோது, ‘‘எனக்கு ஓடீடீ தளத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. வெப் சீரிஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான படைப்புதான் இந்த மத்தகம். மத்தகம் இந்த பாகத்தோடு மட்டுமில்லாமல் தொடர்வதற்கு வாய்ப்புண்டு. அதற்கான கதைகளும் உள்ளது.

தர்புகா சிவா கிடாரி படத்திலிருந்து என்னுடன் பணி செய்கிறார், அவரது இசை ஊக்குவிக்கிறது.

அதர்வா என்னை முழு மனதோடு நம்பினார். அது போல நடிகர் மணிகண்டன் ஒரு மிகச்சிறந்த நடிகர், அவர் கண்டிப்பாக மிகப்பெரிய உயரத்தை அடைவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த படைப்பிற்காக அவர் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது.

நிகிலா விமல் என்னுடைய முதல் படத்தின் கதாநாயகி, ஒரு மாத குழந்தைக்கு அம்மாவாக இதிலும் அவர் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பு ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here