விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘மூன்றாம் கண்.’ ஜான் விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாக்கியிருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று காட்சியளிக்கிறார்கள். மிக வித்தியாசமாக, சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் என் எஸ் உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் ஆர்.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார். பின்னணி இசைக்கோர்வையை ராஜ்பிரதாப் செய்கிறார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்குக் கலை இயக்கம் செய்கிறார்.