திருமண பந்தத்தில் நுழையாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணைப் பற்றிய கதை. சற்றே வில்லங்கமான இந்த கதைக்களத்திற்கு உணர்வுபூர்வமாக திரைக்கதையமைத்து, காமெடி மசாலா தூவியிருக்கிறார் இயக்குநர் மகேஷ்பாபு பச்சிகொலா.
நாயகி அனுஷ்காவுக்கு ஸ்டார் ஹோட்டல் செஃப் கதாபாத்திரம். அதற்கேற்ப சமையல் கலையில் அசத்துவது ஒரு பக்கம்; காதல் திருமணம் செய்துகொண்ட தன் அப்பாவும் அம்மாவும் பிரிந்ததால் காதல் மீதும் கல்யாண வாழ்க்கை மீதும் வெறுப்பு கொண்டவராக நடந்துகொள்வது இன்னொரு பக்கம்…. கல்யாணம் செய்துகொள்ளாமல் குழந்தைக்குத் தாயாவது குறித்து கருத்தரிப்பு மையத்தில் ஆலோசனை பெறும்போது, அதற்கான ஆணை தானே அழைத்து வருவதாக சொல்லி மிரள வைப்பதாகட்டும், இளைஞன் நவீனை தன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சரியான நபர் என கருதி நெருங்கிப் பழகுவதற்கு முயற்சிப்பதாகட்டும், அவரிடம் தன் எண்ணத்தை எடுத்துச் சொல்லி உதவும்படி கேட்பதாகட்டும், அவரை மனதளவில் பிடித்துப் போனாலும் திருமண பந்தம் கூடவேகூடாது என்ற தன் கொள்கையில் உறுதியாக இருப்பதாகட்டும் காட்சிக்கு காட்சி நடிப்பில் நல்ல தேர்ச்சி.
தன்னிடம் பழகும் அனுஷ்காவின் உள்நோக்கம் புரியாமல் அவரைக் காதலிப்பது, விவரம் தெரிந்தபின் அதிர்வது, என்ன முடிவெடுப்பது என புரியாமல் குழம்பித் தவிப்பது என தான் ஏற்ற கனமான கதாபாத்திரத்திற்கான கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார் நவீன். அப்பாவுக்கு பயப்படும் அவரது சுபாவமும் அதை சுற்றி பின்னப்பட்டுள்ள காட்சிகள் சுவாரஸ்யம்.
அப்பாவாக முரளி ராம், அம்மாவாக துளசி இருவரின் நடிப்பும் படத்தின் பெரும்பலம்.
சில காட்சிகளில் மட்டுமே வருகிற நாசர். ஜெயசுதா, நாயகனின் நண்பனாக வருகிற அபிநவ், நாயகியின் சிநேகிதியாக வருகிற சோனியா தீப்தி என அத்தனைப் பேரும் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
கோபி சுந்தர் காட்சிகளின் தேவைக்கேற்ப பின்னணி இசையைக் கொடுக்க, பாடல்களில் இனிமையை இறக்கி வைத்திருக்கிறார் ராடன்.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு கலர்ஃபுல் விருந்து படைக்கின்றன.
இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் அடுத்து இதுதான் நடக்கும் என யூகிக்க முடிந்த சம்பவங்களே அரங்கேறுவது படத்தின் பலவீனம். காட்சிகளில் கலகலப்பூட்டும் சங்கதிகள் கலந்திருப்பதால் சலிப்பின் சதவிகிதம் குறைகிறது.
வித்தியாசமான கதையை காமெடி ஜானரில் பார்க்க விரும்புவோர் தாராளமாக நம்பி போகலாம்.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி – கதையம்சத்தில் கெட்டி!