என் மகன் மீது நம்பிக்கை உள்ளது; இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்! -‘மார்கழி திங்கள்’ பட விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேச்சு

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்‘ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாரதிராஜா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா 13.9.2023 அன்று மாலை சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குந‌ர் மனோஜ் பாரதிராஜா, ‘‘18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குந‌ராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதை சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு ‘நீங்க படம் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர்.

இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக‌ அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘‘நடிகனாக இருந்து இயக்குந‌ராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்” என்றார்.

நடிகர் கார்த்தி, ‘‘மனோஜ் பால்யகாலத்திலிருந்து எனக்கு நண்பன். அவன் இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவான் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக‌ வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

கதாநாயகன் ஷியாம் செல்வன், கதாநாயகி ந‌க்ஷா சரண், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன், இயக்குந‌ர் திரு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், இயக்குந‌ர் பேரரசு, இயக்குந‌ர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார், இயக்குந‌ர் லிங்குசாமி, பெப்சி தலைவரும் இயக்குநருமான‌ ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here