தளபதி விஜய்க்கு எதிர்நாயகனாக நடிப்பு; ‘ஹரா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு; அடுத்ததாக ‘ஜோசப் ஸ்டாலின்’… மோகன் இப்போ படு பிஸி!

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாயகனாக மோகன் நடிக்கிறார். அவருடன் சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹரா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மென்மையான பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனியிடம் பிடித்த மோகன், ‘ஹரா’வில் அதிரடி வேடத்தில் நடிக்கும் நிலையில், திரைப்படத்தின் முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதன் அடுத்தக் கட்ட நகர்வாக, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68′ திரைப்படத்தில் எதிர் நாயகனாக மோகன் நடிக்கிறார்.

‘ஹரா’ படத்தை தொடர்ந்து ‘ஜோசப் ஸ்டாலின்‘ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்படவுள்ள, மிகவும் வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here