சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் காதல் கதையில் உருவாகும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிரபல எழுத்தாளரும், வெற்றி பெற்ற பல திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா எழுதி இயக்கும் முதல் திரைப்படம் ‘மைலாஞ்சி.’

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை வென்ற ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘கோலிசோடா 2’ படத்தில் நடித்த கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ‘மைலாஞ்சி’ என்ற தலைப்பு தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என மாற்றப்பட்டுள்ளது.

படம் குறித்தும் தலைப்பு மாற்றம் குறித்தும் பேசிய அஜயன் பாலா, ‘‘திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதத்தில் மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு அழகான காதல் கதையாக மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.

படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இசைஞானி இளையராஜா, படத்தின் நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவான பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும்” என்றார்.

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களைக் கொண்ட கூட்டணி இந்த படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மையான படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பங்காற்றியுள்ளார்.

லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here