மண் சார்ந்த கதையில் விரிகிற காதல் பயணமாய் ‘மையல்.’
ஆடு திருடுவதை பிழைப்பாக வைத்திருக்கிற அவனை ஊர்க்காரர்கள் மாடு, மாடு என்றுதான் கூப்பிடுவார்கள். மாடசாமி என்ற அவனது பெயரின் சுருக்கம் அது.
இதை கேட்கும்போது ‘அடடே’ என்றிருக்குமே?
இருக்கட்டும்.
அந்த மாடு வழக்கம்போல் ஆடு திருடுகிறான். ஆட்டின் உரிமையாளர்களுக்கு விஷயம் தெரிந்து துரத்துகிறார்கள். அவன் ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கிறான். ஊரிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் பெரிய கிணறுக்குள் விழுகிறான். கால் உடைகிறது.
அவனை அந்த பகுதியில் வசிக்கிற ஒரு இளம்பெண் தூக்கிக் கொண்டுபோய் தனது பாட்டியின் ஒத்துழைப்போடு சிகிச்சையளித்து குணப்படுத்துகிறாள்.
கதை இப்படி நகரும்போது அவர்களுக்குள் காதல் மலராவிட்டால் எப்படி? மலர்கிறது.
ஆடு திருடுபவனின் மனதை அவள் திருடிவிட, நாட்களை உற்சாகமாக கழித்துக் கொண்டிருக்கும் அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள்.
அந்த நேரமாகப் பார்த்து மாடசாமியை தட்டித்தூக்கும் போலீஸ், ஊரில் யாரோ செய்த இரட்டைக் கொலைப் பழியை அவன் மீது சுமத்த திட்டமிடுகிறது. அதன்பிறகு நடப்பதெல்லாம் ரணகளம்; அநியாயம், அக்கிரமம்…
காதல் ஜோடி மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்களா, அடிபட்டுச் செத்தார்களா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் ஏழுமலை
கதைநாயகன் மாடசாமியாக ‘மைனா’ சேது. உற்சாகம், காதல், வலி, வேதனை என பல உணர்வுகளை அவர் கச்சிதமாக வெளிப்படுத்துவது புதர்க்காடாய் பரவிப் படர்ந்திருக்கும் மீசை தாடிக்கிடையில் கொஞ்சமாய் எட்டிப்பார்க்கும் கண்களில் தெரிகிறது.
மந்திர தந்திரம் தெரிந்த குடும்பத்துப் பெண், ஜன நடமாட்டமில்லாத இடத்தில் அமைந்த வீட்டில் வசிக்கிற வெளியுலகம் தெரியாத பெண், தன்னிடம் அடைக்கலமானவன் மீது காதலில் விழுகிற பெண், காதலனுக்கு ஆபத்து எனும்போது காப்பாற்றத் துடிக்கிற பெண், ஊரிலுள்ள பெரிய மனுசன் அனுபவிக்க ஆசைப்படுகிற பெண்… இப்படி கனமான கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார் கதைநாயகி சம்ரிதிதாரா. இயல்பாக அமைந்திருக்கிற கிராமத்துப் பெண்ணுக்கான முக லட்சணத்தோடு பாவாடை தாவணியும் இணைந்துகொள்ள அழகின் சதவிகிதம் எகிறுகிறது. புன்னகையால் மனதை நிறைப்பவர் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பார்டரில் பாஸாகிறார்.
பி எல் தேனப்பனுக்கு தனித்துவம் என எதுவுமில்லாத வில்லன் வேடம். கொடுத்த வேலையைச் செய்திருப்பதில் குறையில்லை.
சி எம் பாலா காவல்துறை அதிகாரியாக வருகிறார். அவருக்கும் அவருடன் இணைந்து சுற்றுகிற சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட நான்கைந்து போலீஸாருக்கும் வில்லனுக்கு அடியாள் வேலை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
கதாநாயகியின் பாட்டியாக வருபவர் நிஜத்தில் இளமையானவர். பேத்தியின் காதலை ஆரம்பத்தில் எதிர்த்து பிறகு கிரீன் சிக்னல் காட்டுகிறார். மந்திரவாதி என்ற பெயரில் ஒன்றிரண்டு சித்து வேலைகளை செய்து கடமையை முடித்துக் கொள்கிறார்.
இசையமைப்பாளர் செளந்தர்யனின் வாரிசு அமர்கீத் இசையில் ‘என்னடி செஞ்ச’ பாடல் கோடை மழையின் குளிர்ச்சியாய் செவிக்குள் பாய்கிறது. ‘கத்துறேன் நான் கரையுறேன் நான்’ பாடல் சோககீதமாய் கடந்துபோகிறது. பின்னணி இசை சில காட்சிகளில் மட்டும் கவனம் ஈர்க்கிறது.
பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு தரம்; படத்துக்கு பலம்.
ஜெயமோகனின் கதைக்கு திரைவடிவம் தந்திருக்கும் இயக்குநர் ஏழுமலை, படத்தின் முன் பாதியிலிருந்த உயிரோட்டத்தை பின்பாதியில் தக்க வைக்காததால் மையம் ரசிகர்கள் மனதில் மையம் கொள்ள முடியாமல் திணறுகிறது!
-சு.கணேஷ்குமார்