மிகச் சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்! – ‘மங்கை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் நாயகி கயல் ஆனந்தி பெருமிதம்

‘கயல்’ ஆனந்தி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, குபேந்திரன் காமாட்சி இயக்கிய ‘மங்கை’ படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்

‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். அதையடுத்து சென்னையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினரோடு திரைக்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசியபோது, “பதினைந்து வருடமாக நான் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று என்னை விட அதிகமாக விரும்பியவர் என் மனைவி, அவருக்கு நன்றி.

என் கனவை நனவாக்கிய தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்களுக்கு நன்றி. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் என்றால் ஜாஃபர், சலீம், மைதீன் மூவரும் சகோதரர்கள். அவர்களை ஒன்றாகப் பார்க்கும் போது ஒரு பாசிட்டிவிட்டி கிடைக்கும். அவர்கள் மூவருக்கும் என் வாழ்நாள் முழுவதற்குமான அன்பும் நன்றியும். பிறகு என் உடன்பிறவா சகோதரர் கார்த்திக் துரை சாருக்கு நன்றி. இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிக முக்கிய காரணம் கார்த்திக் தான், படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு பிரச்சனைகளை எங்களுக்காக சமாளித்தார். சினிமாத்தனம் இல்லாமல் பழக் கூடியவர் கார்த்திக் சார்.

ஆனந்தி மேடத்திற்கு நன்றி. இந்த கதாபாத்திரம் ஆனந்தி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியது ஜாஃபர் சார் தான். கதையைக் கேட்டுவிட்டு ஆனந்தி மேடம் 2 நிமிடம் யோசித்தார், பிறகு இப்படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார். அவர் இல்லை என்றால் இப்படம் இந்த அளவிற்கு வந்திருக்காது, மிகவும் சின்சியரான ஆர்டிஸ்ட். சிவின் மேடம் நடித்த கதாபாத்திரம் பத்து நிமிடங்கள் வரும், ஆனால் இந்த கதைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். ‘லவ் டுடே’ ரீலிசுக்குப் பின்னர் ரொம்பவே பிஸியாக இருந்தாலும் தேதி ஒதுக்கி நடித்துக் கொடுத்த கதிருக்கு நன்றி. துஷ்யந்த் நல்ல நடிகர், நல்ல டிரைவர், ஏனென்றால் மலைப்பகுதியில் கார் ஓட்டுவது போல் பல காட்சிகள் இருந்தது. சைலண்டாக இருந்து காட்சிகளில் நடிப்பால் எமோட் செய்வார். கவிதா பாரதி சார் மிகவும் உதவியாக இருந்தார். அவர் ஒரு இயக்குநர் என்பதால் பல ஐடியாக்கள் கொடுத்து உதவினார்.

எங்கள் நடன இயக்குநர் ராதிகா மாஸ்டருக்கு நன்றி. தீசன் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன. மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து கொடுத்த எஸ்.ஜே. ஸ்டார் சாருக்கு நன்றி. எடிட்டர் பார்த்திபன் ஆண்டனிக்கு நன்றி. இணை இயக்குநர் விக்ரம் ஆரம்பத்தில் இருந்து என்னுடனே இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படம் கருத்து சொல்கிற, பெண்ணியம் பேசுகின்ற படம் என்று இல்லை. இது எளிய, நேர்மையான முயற்சி. இன்னும் சொல்லப் போனால் இது ஆண்களுக்கான படம். வயது வந்த எதிர்பாலின ஈர்ப்பு இருக்கிற ஆண்கள், பெண்கள் இருவரும் பார்க்க வேண்டிய படம்” என்றார்.

நடிகை ஆனந்தி பேசியபோது “மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்.
இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும். துஷி கார் ஓட்டிக் கொண்டே அழகாக நடித்திருக்கிறார். ராதிகா மாஸ்டர் உடனான போர்ஷன் கலகலப்பாக இருந்தது. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி. மிகச் சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர் கார்த்திக் துரை, பிக்பாஸ் சிவின், ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டார், இசையமைப்பாளர் தீசன், நடன இயக்குநர் ராதிகா, இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி, நடிகர் ஆதித்யா கதிர், தயாரிப்பாளர் ஜாஃபர் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here