இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , ‘ஃபைவ் ஸ்டார் ‘ கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்..படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.