ஏன் இந்த படத்தை பார்க்கிறோம் என்று நினைக்க மாட்டீர்கள்! -‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வரலக்ஷ்மி சரத்குமார் பேச்சு

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம் த்ரில்லர் படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.’ இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு 15.05.2023 அன்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகை வரலக்‌ஷ்மி பேசியதாவது, “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள் ‘கொன்றால் பாவம்’ படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும். ஏன் இந்தப் படத்தை பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில் கூட நீங்கள் நினைக்க மாட்டீர்கள். த்ரில்லர் கதையான இதை எப்படி திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம்தான் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதையெல்லாம் மிகச் சரியாக எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்துடன் ஆஹா  இணைந்திருப்பது மகிழ்ச்சி.

இந்த படத்தின் நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆரவ், அப்பொழுதுதான் பிக் பாஸில் டைட்டில் வென்று வெளியே வந்த சமயம். ஆரவ், சந்தோஷ் என நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பதாலும் இந்த படம் நான் ஒத்துக்கொள்ள ஒரு காரணம். விவேக் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தில் அவர் ஒரு கண்டுபிடிப்பு. அவருக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவே இந்த படத்தில் அவரை நான் பரிந்துரைத்தேன். அது இயக்குநருக்கும் திருப்தி அளித்தது மகிழ்ச்சி.

எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால், எங்கள் படத்தில் கதை மட்டும் தான் உள்ளது என்பதால் ஊடக நண்பர்கள் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்றார்.

நடிகர் ஆரவ் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்த ஆஹாவுக்கு நன்றி. ‘கலக தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்தது. தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், ‘எப்பொழுது ஷூட்டிங்?’ என்று கேட்டேன். ‘அடுத்த வாரம்’ என்றார். தமிழ் சினிமாவில் பொதுவாக கதை சொல்லி படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு மாதங்கள் ஆவது ஆகும். ஆனால், இவர் சொன்னது போலவே அடுத்த வாரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார்.

டப்பிங்கில் பார்க்கும்பொழுது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், விவேக், யாசர் என இவர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. தொழில்நுட்ப குழு அனைவரும் சிறப்பாக தங்கள் பணியை கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, “நேற்றுதான் ‘கொன்றால் பாவம்’ படத்திற்காக உங்கள் அனைவரையும் சந்தித்தது போல உள்ளது. இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு எல்லாம் எப்போது பள்ளி விடுமுறை முடியும், நண்பர்களை சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும். அது போலதான் எனக்கு இந்த டீமும். எங்களுக்குள் இருந்த நட்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. நண்பர்களாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த அதே சமயத்தில் வேலையும் செய்தோம். என்னுடைய ‘கதிர்’ என்ற திரைப்படம் தியேட்டருக்கு வந்து பிறகு ஓடிடிக்காக நாங்கள் போராடிக் கொண்டிருந்த பொழுது ஆஹா எங்களுக்கு உதவியது. அதற்கு நன்றி!

இந்த படத்திலும் தயாரிப்பு வகையில் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நாங்கள் அனைவரும் நண்பர்கள் ரீயூனியன் செய்தது போல தான் இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொன்றால் பாவம் படத்தை போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள் என வேண்டுகோள் வைக்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here