ரசிகர்களின் உற்சாக வரவேற்பை சம்பாதித்த ‘மும்முடிச் சோழன்‘ வரலாற்று நாடகம்! நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்தது.

‘சென்னை ட்ராமாஸ்’ எனும் நாடக தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக கடந்த 10.6.2023 சனிக்கிழமையன்று சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேறியது ‘மும்முடிச் சோழன்‘ வரலாற்று நாடகம்.

தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நாடகத்திற்கு அதன் தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

தொழிலதிபர் விஜிபி சந்தோசம், விஜயா தாயன்பன், நடிகர் எஸ்வி. சேகர், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நெல்லை ஜெயந்தா, உலகத் தமிழ் வளச்சிக் கழகத் தலைவர் அவ்வை அருள், கே பி கே செல்வராஜ், மருத்துவர் க மணிவாசகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாமன்னன் தஞ்சை ராஜராஜ சோழனின் வரலாற்றை பதிவு செய்கிற மேடை நாடகம்தான் என்றாலும் உருவாக்கத்தின் பிரமாண்டத்தால் நடிகர் நடிகைகளின் தேர்ந்த பங்களிப்பால் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்துவிட்டனர்.

ஒவ்வொருவரின் நடிப்புக்கும் அரங்கத்தில் மக்கள் அத்தனை உற்சாகமாய் கை தட்டி ஆரவாரம் செய்தனர். குறிப்பாக ஆதேஷ்பாலா இராஜேந்திர சோழனாக நடித்த காட்சிகளுக்கு பெரியளவில் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.

சென்னை யோகஸ்ரம் டிரஸ்டின் நிறுவனர் டாக்டர் ஏ பி வைத்தீஸ்வரன் தான் புதிதாக துவங்கியுள்ள ‘சென்னை ட்ராமாஸ்’ என்ற நாடக தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக மேற்குறிப்பிட்ட நாடகத்தை அரங்கேற்றினார். தஞ்சை ஆர் கே வசனமெழுதி நாடகமாக்கம் செய்ய, நாடகத்தை ஏ எஸ். மணி இயக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here