மகாராஜா சினிமா விமர்சனம்

‘விஜய் சேதுபதியின் 50-வது படம்’ என்கிற பெருமையைச் சுமந்திருக்கிற படைப்பு. தென்றலின் இதம், சூறாவளியின் சீற்றம், சுனாமியின் ஆக்ரோஷம் என மக்கள் செல்வனை முப்பரிமாணத்தில் மூழ்கடித்திருக்கிற ‘மகாராஜா.’

சிகையலங்கார நிபுணரான மகாராஜா, தன் வீட்டிலிருந்து திருடுபோன ‘லெஷ்மி’ ஒரு சாதாரண பொருளைக் கண்டுபிடித்து தரச் சொல்லி போலீஸில் புகார் கொடுக்க போகிறார். அவருக்கும் அவரது புகாருக்கும் மதிப்பில்லாமல் போகவே, ‘கண்டுபிடித்து தந்தால் லட்சக்கணக்கில் பணம் தருகிறேன்’ என்கிறார். உடனடியாக புகாரை பெற்றுக்கொள்ளும் இன்ஸ்பெக்டர், லெஷ்மியை தேட தனிப்படை அமைக்கிறார். அந்த படை சுறுசுறுப்பாகிறது. அவர்கள் லெஷ்மியை கண்டுபிடித்தார்களா இல்லையா? என்கிற கேள்வியோடு நகரும் கதையில் வீடு புகுந்து திருடுகிற, கொடூரமாக கற்பழிக்கிற மூவர், லஞ்சம் பெறுவதை குற்றவுணர்ச்சியின்றி செய்கிற இன்ஸ்பெக்டர், அவர் சொல்வதைச் செய்யும் போலீஸ் அதிகாரிகள், மகாராஜா சிலரை கொன்று தீர்க்க திட்டமிடுதல் என பரபரப்பு கூடுகிறது.

மகாராஜா தேடும் லெஷ்மியின் பின்னணி என்ன? அவர் யாரையெல்லாம் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார்? அதற்கான காரணம் என்ன? அவரது திட்டம் நிறைவேறியதா? என்பதெல்லாம்தான் இயக்குநர் ‘குரங்கு பொம்மை’ நித்திலன் தந்திருக்கும் மீதிக்கதை.

மகாராஜா என்ற கேரக்டரின் பெயரில் கனம் இருப்பதைப் போலவே, விஜய் சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இது கனமான வேடம். மகள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்ற நினைக்கும் அப்பாவாக சென்டிமென்டில், எதிரிகளை கண்டறிய காவல்துறையைப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனத்தில், எதிரிகளை துவம்சம் செய்யும் வெறித்தனத்தில் என அத்தனையிலும் உயிரோட்டத்துடன் மக்கள் செல்வன் தந்திருப்பது மலைக்க வைக்கும் நடிப்பு. தியேட்டரில் காட்சிக்கு காட்சி அள்ளுகிறது அப்ளாஸ்! மனிதர் உணர்ச்சி வசப்படும்போது அசுரபலம் பற்றிக் கொள்வதில் சுவாரஸ்யத்தைவிட அதிகமாய் எட்டிப் பார்க்கிறது சினிமாத்தனம்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மனிதாபிமானமற்ற கொடூர வில்லனாக களம் காண, ‘பாய்ஸ்’ மணிகண்டனும் அதே அளவுக்கான வீரியம் காட்ட, வினோத் சாகர் அவர்களுடன் இணைந்து குற்றச் செயல்களை குஷியாக செய்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ் பணத்துக்காக எதையும் செய்யும் இன்ஸ்பெக்டராக வலம் வந்து, கிளைமாக்ஸில் வேறொரு விதமாக வெளிப்படுவது திரும்பிப் பார்க்க வைக்கிறது.

விஜய் சேதுபதியின் மகளாக வருகிற இளம் பெண் கதையைத் தாங்கிப் பிடிக்கும் பாத்திரத்தில் கச்சிதமாக நடித்து, நிறைவுக் காட்சியில் சமூக அவலத்தை வசனங்களால் சுட்டிக்காட்டும்போது பொருத்தமான முகபாவம் காட்டியிருக்கிறார்.

‘பேச்சிலர்’ படத்தில் அப்படியொரு மாடர்ன் லுக்கில் வந்தவரா இவர்?’ திகைப்பூட்டுகிறது விஜய் சேதுபதிக்கு மனைவியாக ஒருசில காட்சிகளில் தோன்றி மறைகிற திவ்யபாரதியின் எளிமையான தோற்றமும் அதற்கேற்ற இயல்பான நடிப்பும்!

அனுராக்கின் மனைவியாக அபிராமி, போலீஸ் அதிகாரிகளாக அருள்தாஸ், முனீஸ்காந்த், சரவண சுப்பையா என நடிகர் நடிகைகள் பட்டியல் ரொம்பவே நீளம். கதையில் அனைவருக்கும் இருக்கிறது முக்கியத்துவம்.

சீரியஸான கதையில், காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார் டி வி எஸ் ஃபிப்டி’யை மட்டுமே திருடுகிற கல்கி. இயக்குநர் பாரதிராஜாவும் இரண்டொரு காட்சியில் வந்து போகிறார்.

சிங்கம் புலி புதிய ரூட்டில் பாய்ந்திருக்கிறார். பயம், பதட்டம் என நடிப்பிலும் அதே பாய்ச்சல். மம்தா மோகன்தாஸுக்கு இன்னும் கொஞ்சம் வலுவான பாத்திரம் கொடுத்திருக்கலாம்.

‘காந்தாரா’ அஜ்னிஷ் லோக்நாத்தின் பின்னணி இசை மிரட்டலான காட்சிகளுக்கு வோல்டேஜ் கூட்டியிருக்கிறது.

கதைக்களத்திற்கு பலம் சேர்த்ததில் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமனின் பங்கு பெரிது.

நேர்க்கோட்டில் செல்லாமல் நான் லீனியராக முன்னும் பின்னுமாக பயணிக்கிற கதையை, புரியும்படி தொகுக்க எடிட்டர் பிலோமின்ராஜ் பெரியளவில் உழைத்திருக்கக்கூடும்.

அனல் அரசு பங்களிப்பில் சண்டைக் காட்சிகளிலிருக்கும் ரத்தம் தெறிக்கிற பயங்கரம் திகிலடையச் செய்கிறது. வில்லன், விஜய் சேதுபதியின் கையை வெட்ட முயற்சிக்கும் காட்சியில் மனதுக்குள் உதறல் உருவாகலாம்; ஜாக்கிரதை.

‘கதை எதை நோக்கி போகிறது?’ ‘இயக்குநர் என்னதான் சொல்ல வருகிறார்?’ என இடைவேளை வரை குழப்பத்தை உருவாக்கி, எதிர்பார்ப்பைத் தூண்டி பின்பாதியில் குழப்ப முடிச்சுகளை ஒவ்வொன்றாய் விடுவிப்பது, தொடர்ச்சியாக அணிவகுக்கும் டிவிஸ்ட், எதிர்பாராத கிளைமாக்ஸ் என கதையோட்டம் தருகிற அனுபவம் கிரைம் திரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் மன நிறைவு தரும்.

மகாராஜா, வசூலில் மெகாராஜா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here