வலியவர்களால் பாதிப்படைந்த எளியவர்கள், அவர்களால் முடிந்தவிதத்தில் பழிவாங்குகிற கதைக்களத்தில் மற்றுமொரு படம்!
வரலெஷ்மி சரத்குமாரை கதைநாயகியாக்கி ‘கொன்றால் பாவம்’ படம் தந்தவர் அதே நாயகியோடு கை கோர்த்திருக்கும் அடுத்த படைப்பு. ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிற ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.’
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து உயிருக்குயிரான நண்பர்களாக மாறிப்போன அந்த ஐந்து பேரில் ஒருவர், அரசியல் பலமிக்க காவல்துறை அதிகாரியாலும் அந்த அதிகாரியின் செல்வாக்கை கைக்குள் வைத்திருக்கும் லோக்கல் தாதா ஒருவராலும் உயிரை இழக்கிறார்.
அந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிப்பது சாத்தியமில்லை என்பதால், நண்பர்கள் நான்கு பேரும் இணைந்து பழி தீர்க்க மிகமிக சாமர்த்தியமாக திட்டமிடுகிறார்கள்.
அந்த திட்டம் என்ன, அதை அவர்கள் எப்படி செயல்படுத்துகிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதெல்லாம் திரைக்கதையோட்டத்தில் பரபரக்கிற காட்சிகள்…
திட்டத்தை நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ். சம்பந்தப்பட்டவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது கிளைக்கதை.
காவல்துறை அதிகாரியாக வரலெஷ்மி சரத்குமார். அதிர்ச்சி, ஆவேசம், நிதானம், பயம் என உணர்வுகள் பலவற்றையும் பரிமாறும்படியான பாத்திரம். அவரது முகபாவம் அத்தனைக்கும் கச்சிதமாக ஒத்துழைத்திருக்கிறது.ஆரவ், அமித் பார்கவ் இருவரது நெகுநெகு உயரம் அவர்கள் ஏற்றுள்ள காவல்துறை உயரதிகாரி பாத்திரத்துக்கு பொருந்திப்போக, நடிப்புப் பங்களிப்பிலும் தேவையான கம்பீரம் காட்டியிருக்கிறார்கள்!
நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால், தாதாவாக சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரின் அளவான நடிப்பும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சீரியஸான விஷயங்களைக்கூட சிரித்துக் கொண்டே அணுகும் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரின் ‘ச்சில் புரோ’ அத்தியாயங்கள் கலகலப்பு!
கதையின் பெரும்பகுதி ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே நடந்தாலும் சலிப்பு தராத திரைக்கதையால் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. காவல் நிலையத்தில் வைத்தே அசிஸ்டென்ட் கமிஷனரை பரலோகத்துக்கு அனுப்ப திட்டமிட்டு செயல்படுத்தும் காட்சிகள், அங்கு அரங்கேறும் எதிர்பாராத திருப்பம் கூடுதல் விறுவிறுப்பு.
மணிகாந்த் கதிரியின் (காலஞ்சென்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கதிரி கோபால்நாத்தின் மகன்) பின்னணி இசை காட்சிகளுக்கு வேகமூட்டி திகில் உணர்வைக் கடத்துகிறது.
திரைக்கதை எழுதும்போது கொஞ்சம் கூடுதலாக மூளையைக் கசக்கியிருந்தால் அடுத்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என எளிதில் யூகிக்க முடிகிற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
அதையெல்லாம் தாண்டி எளிமையான கதையை எளிமையான பொருட்செலவில் படமாக்கிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்!