உயரம் குறைந்தவன் திறமையால் உயர்வடைகிற கதை!
நெடுமாறன் குள்ளமானவன். அதனால் அக்கம் பக்கம், பள்ளி, கல்லூரி என எல்லா இடத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளாகிறான். அப்படி தன்னை சீண்டுபவர்கள் மீது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப சீற்றம் காட்டுகிறான்.
வெளியுலகம் கசப்பான அனுபவங்களைத் தந்தாலும், அப்பா அம்மாவின் அரவணைப்பு, அக்காவின் பாசம், சிநேகிதியின் நேசம் சூழ்வதால் அந்த குள்ள மனிதனின் உள்ளம் உற்சாகமாகவே இருக்கிறது. அதே உற்சாகத்தோடு நன்றாகப் படிக்கிறான். தன்னைக் கேலி செய்தவர்கள் வியக்கும்படி, பாராட்டும்படி சில விஷயங்களைச் செய்கிறான்.
ஒரு கட்டத்தில் அக்கா காணாமல் போவது, அதனால் பெற்றோர் பரிதாப முடிவை சந்திப்பது என அவனது வாழ்க்கை ரணமாகிறது. உடைந்துபோன மனதோடு அக்காவை தேடி புறப்படுகிறான்.
அக்கா கிடைத்தாரா? தான் நினைத்த விஷயங்களை அவனால் எட்டிப் பிடிக்க முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
ஆரம்பத்தில் உருவ கேலி, அக்கா தம்பி சென்டிமென்ட் என நகர்கிற கதை அதன்பின், தொடர்ச்சியாக இளம்பெண்கள் கொலை செய்யப்படுவது, விசாரணையில் நெடுமாறனை போலீஸ் சந்தேகிப்பது என வேறொரு டிராக்கில் கிரைம் திரில்லராக சற்றே வேகமெடுக்கிறது…
உடற்குறைபாடு கொண்டவர்கள் எதையாவது சாதித்தால் மட்டுமே கொண்டாடுகிற, இயல்பான வாழ்க்கை வாழும்போது கேவலப்படுத்துகிற சமூகத்தின் மீது கோபப்பார்வை வீசியிருக்கிறது திரைக்கதை. இயக்கம் மந்த்ரா வீரபாண்டியன் (இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.)
நிஜமாகவே குள்ளமாக இருக்கிற வெங்கட் செங்குட்டுவன், குட்டையன் பாத்திரத்துக்கு சரியான பொருத்தம். உருவ கேலிக்கு ஆளாகும்போதெல்லாம் ஆவேசமாவது, அப்பா அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும்போது கதறித் துடிப்பது, மதி நிறைந்த மாறனாகி நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை துப்பறிந்து கண்டுபிடிப்பது, காவல்துறைக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்துவது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். அவர் செய்யும் விஷயங்களில் லாஜிக், நம்பகத்தன்மை என எதுவும் இல்லாதிருப்பது பெருங்குறை என்றாலும் நடிப்பில் குறையில்லை!
‘லவ் டுடே’ இவானா ஆரம்பக் காட்சிகளில் தம்பி மீது பிரியம் சுமந்து வருகிறார். பின்னர் தோன்றுகிற அத்தனை காட்சிகளிலும் கல்யாணம் காதுகுத்துக்குப் போவதுபோல் பகட்டான சேலைகளைச் சுமந்திருக்கிறார். நடிப்பில் சொல்லிக்கொள்ள பெரிதாய் ஏதுமில்லை.
நெடுமாறனுக்கு அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர். குள்ளமாகப் பிறந்துவிட்ட மகன் மீது அவர் காட்டுகிற கனிவும், தருகிற ஊக்குவிப்பும் கவர்கிறது.
காவல்துறை அதிகாரியாக இளமையும் அழகும் நிறைந்த ஆராத்யா. பளீர் புன்னகையும் நாயகன் மீதான அவரது பரிவும் ஈர்க்கிறது.
காவல்துறை உயரதிகாரியாக ஆடுகளம் நரேன், காவல்துறை அதிகாரியாக சுதர்சன் கோவிந்த், வில்லனாக பிரவீன் குமார் என இன்னபிற வேடங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நேர்த்தி.
கார்த்திக் ராஜாவின் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் ‘பூலோகமே ஒரு சொர்க்கமானதே’ பாடல் மனதைக் கரைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தம்.
கதைநாயகன் நினைத்ததையெல்லாம் செய்வது, அவன் நினைப்பதெல்லாம் நடப்பது, திடீர் திடீரென வெற்றிகள் கைசேர்வது என மனம்போன போக்கில் அமைந்திருக்கும் திரைக்கதை அலுப்பு தந்தாலும், கதையின் மையக்கரு ‘உருவத்தைப் பார்த்து யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது’ என்பதை வலியுறுத்தியிருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம்.