ஆன்மிகம், முன் ஜென்மம், மாயன் காலண்டர் கணிப்புகள் என கலந்துகட்டிய கதைக்களத்தில் ஃபேண்டசி ஜானரில் ஒரு படம்.
இன்னும் சில நாட்களில் உலகம் அழிந்து விடும் என இளைஞன் ஆதிக்கு மெயிலில் தகவல் வருகிறது. அந்த தகவல் உறுதியானது என்பதும் அவனுக்குத் தெரிகிறது. நமக்கு அப்படியொரு சூழ்நிலை அமைந்தால், இந்த ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும், அந்த விஷயத்தை அனுபவித்துவிட வேண்டும் என்று துடிப்போம். அவனும் அப்படியே செயல்படுகிறான். மட்டுமல்லாமல் கெட்டவர்களை அழிக்கும் சக்தியாகவும் மாறுகிறான். அவனை அப்படி மாற்றியது எது? முன் ஜென்மத்தில் அவன் யார்? என்கிற சிலபல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இயக்குநர் ராஜேஷ் கண்ணாவின் மனம்போன போக்கில் பயணிக்கும் திரைக்கதை. இந்த படத்திற்கு இரண்டாம் பாகமும் உண்டாம்.
ஐடி பணியில் அவமானங்களைச் சகித்துக் கொள்வதாகட்டும், அவமானப்படுத்தியவரின் கன்னத்தைப் பதம் பார்த்து கெத்தாக கடந்து செல்வதாகட்டும், ஏதோவொரு சக்தியின் உந்துதலில் சமூகத்தில் திரியும் கேடுகெட்டவர்களை அழித்தொழிப்பதாகட்டும் ஆதியாக வருகிற வினோத் மோகனின் ஆர்ப்பாட்டமான அலட்டலான நடிப்பு பரவாயில்லை ரகம்.
வெகுநாள் கழித்து பார்த்தாலும் பிந்துமாதவியின் கண்களில் அதே மின்னல் வெட்டு, புன்னகையில் அதே வசீகரம்.
ஜான் விஜய் போலீஸ் உயரதிகாரியாக வருகிற ஜான் விஜய் வழக்கமான தெனாவட்டு உடல்மொழியால் அவருக்கான காட்சிகளை நிரப்பியிருக்கிறார். சாய் தீனா, ஆடுகளம் நரேன், ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு என பலரும் படத்தில் உண்டு.
கிளைமாக்ஸாக இடம்பெற்றிருக்கிற போர்க்கள காட்சியில் கிராபிக்ஸ் பங்களிப்பு கவனம் ஈர்க்கிறது.
எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையில் தன்னால் முடிந்த அதிரடியைத் தந்திருகிறார்; அருண் பிரசாந்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தின் சில காட்சிகளை பிரமாண்டமாக உருவாக்குவதில் அக்கறை காட்டியிருக்கும் இயக்குநர், அந்த அக்கறையில் சில சதவிகிதத்தை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.