சிறு வயதில் நடந்த நல்ல சம்பவங்களை நினைத்துப் பார்ப்பது சந்தோஷத்தின் சதவிகிதத்தை சரசரவென கூட்டிவிடும். அதே சிறுவயதில் சுற்றித் திரிந்த இடங்களை மீண்டும் போய் பார்க்கிற, அப்போது பழகியவர்களை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தால் கிட்டத்தட்ட சொர்க்கத்தில் மிதக்கிற உணர்வுகூட கிடைக்கலாம். அப்படியொரு, மலரும் நினைவில் மத்தாப்பு பூக்கும் கதையைக் கையிலெடுத்திருக்கிறார் ’96’ தந்த இயக்குநர் பிரேம்குமார்
சொத்துப் பிரச்சனையால் குடும்பத்தைப் பிரிந்து, தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்து, நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தின் வாரிசு அருள்மொழி.
அந்த அருள்மொழி, சிறு வயதில் பாசமாகப் பழகிய உறவுக்கார தங்கையின் திருமணத்துக்காக 20 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு போகிறார்.
போன இடத்தில் அவரை பிரியமாக வரவேற்பது, அத்தான் அத்தான் என அழைத்து உபசரிப்பது, சிறுநீர் கழிக்கப் போனால்கூட துணைக்குப் போவது என அவரையே சுற்றிச் சுற்றி வருகிறான் அந்த இளைஞன். அருளுக்கோ அவனை யாரென்றே தெரியவில்லை. நேரம் போகப்போக அவனது அன்புத்தொல்லை அருளுக்கு ஒருவித எரிச்சலை உருவாக்குகிறது.
திருமண ரிஷப்சனில் கலந்துகொண்டபின், இரவே சென்னை புறப்பட திட்டமிட்டிருந்த அருள், அப்படி புறப்பட முடியாமல் அவனது வீட்டில் தங்குகிற நிலைமை. அந்த இரவில் அவனுடன் ஊர் சுற்றுகிற வாய்ப்பு கிடைக்க, அவன் தன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தின் வெளிப்பாடாய் பிறக்கப்போகிற குழந்தைக்கு தன் பெயரைச் சூட்ட முடிவெடுத்திருப்பது வரை பல விஷயங்கள் தெரிகிறது; ஆனால் அவன் யார், தனக்கும் அவனுக்குமான சம்பந்தம் என்ன என்பது தெரியவில்லை; அவன் பெயர்கூட அருளுக்கு பிடிபடவில்லை. அதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் அருள், பொழுது விடிவதற்குள்ளாக அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு புறப்பட்டுவிட… இப்போது, படம் பார்க்கும் நமக்குள் அருள் மனதிலிருக்கிற ‘அவன் யார்?’ என்ற கேள்வி நமக்கு தொற்றிக் கொள்கிறது.
நாட்கள் கடந்தோட, ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கேள்விக்கு பதில் கிடைக்கிறது. அந்த தருணம் சிலிர்ப்பு தருகிறது.
அருள் மீது பாசமழை பொழிபவராக கார்த்திக். ஹீரோயிஸம் காட்ட துளிகூட அனுமதிக்காத கதாபாத்திரம். கள்ளமில்லாச் சிரிப்பாலும் வெள்ளந்திப் பேச்சாலும் மட்டுமே அந்த பாத்திரத்தை தாங்கியிருக்கிறார். தஞ்சாவூரின் வட்டார வழக்கில் சரளமாக பேசும் வசனங்களும் ஈர்க்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்கைக்கு வளையல், கொலுசு என நகைகளை தன் கையாலேயே அணிவித்து வாழ்த்துவதாகட்டும், கார்த்தியின் அன்பால் திணறிப்போய் அவரது பெயரை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தவிப்பதாகட்டும் 100% உயிரூட்டியிருக்கிறது அருள்மொழி பாத்திரத்திற்கு அர்விந்த்சுவாமி தந்திருக்கும் உடல்மொழி.
கார்த்தியின் மனைவியாக ஸ்ரீதிவ்யா ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே எட்டிப் பார்த்தாலும் மனதில் நிறைகிறார்.
அர்விந்த்சுவாமியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ், மனைவியாக தேவதர்ஷினி, உறவினராக ராஜ்கிரண், கன்டக்டராக கருணாகரன் என படம் முழுக்க தேர்ந்த நடிகர், நடிகைகளைப் பார்க்க முடிகிறது.
காமெடிக்கென தனியாக யாருமில்லை. படத்தின் இரு ஹீரோக்களுமே அவ்வப்போது அந்த வேலையையும் செய்கிறார்கள். நீடாமங்கலத்தில் சுத்தபத்தமான லாட்ஜ் தேடியலைவது அதிகம் கலகலப்பூட்டுகிறது.
கோவிந்த் வசந்தா இசையில் கமல்ஹாசன் குரலில் ஒலிக்கும் யாரோ இவன் யாரோ’ பாடல் மனதில் தங்கும். காட்சிகள் கடத்தும் உணர்வுகளுக்கு துணை நிற்கிறது பின்னணி இசை.
தஞ்சை, திருவாரூர் பேருந்து மார்க்கத்திலிருக்கும் வயல்வெளி, கோயில் குளம், அணைக்கட்டு என பலவற்றை அதன் இயல்புத்தன்மை மிகாமல் பகலிலும் இரவிலுமாக சுற்றிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ்.
கார்த்தி சரக்கடித்துக் கொண்டே காளை வளர்ப்பு, ஜல்லிக்கட்டில் பங்கேற்பு, சோழர்களின் வரலாற்றுப் பெருமை, ஸ்டெர்லைட் போராட்டக் களம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயங்கள் அழுத்தமாக இருந்தாலும், வெகுநேரம் பேசிக் கொண்டேயிருப்பது சற்றே சலிப்பூட்டுகிறது.
அதையெல்லாம் தாண்டி அதிரடியான சண்டைக் காட்சிகள், அதீத வன்முறை, ரத்தச்சகதி, டூயட் பாட்டு, ஐட்டம் சாங் என கமர்ஷியல் மசாலாக்களை தவிர்த்து உணர்வுபூர்வமாக, உயிரோட்டமான படைப்பை பெரிய இடைவெளிக்குப் பிறகு பெரிய திரையில் பார்ப்பது வேறொரு உலகத்துக்கு போய்வந்த உணர்வு தராமல் விடாது…
மெய்யழகன், புத்துணர்வு பூகம்பம்!