ஒரு கொலை நடந்துவிட, அது யாரால் நடந்திருக்கும், எதற்காக நடந்திருக்கும் என்கிற போலீஸ் விசாரணையை மையப்படுத்தி சுழலும் ‘மெரி கிறிஸ்துமஸ்.’
மும்பை பம்பாயாக இருந்த காலகட்டம். தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, பட்டாசு வெடிப்பு என கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக தொடங்கிய அந்த முன்னிரவு வேளையில், அதற்குமுன் எந்தவித அறிமுகமும் இல்லாத அப்போது அறிமுகமான விஜய் சேதுபதியுடன் நட்பாகிறார் கத்ரினா கைஃப்.
பிற பெண்களுடன் தொடர்பிலிருக்கும் கணவன் மீது கடுப்பு, பேசும் திறனற்ற தன் குழந்தை மீது கனிவு என்றிருக்கும் கத்ரினா மீது விஜய் சேதுபதிக்கு ஒருவித பிடிப்பு ஏற்படுகிறது.
அதன் விளைவாக கத்ரினா, விஜய் சேதுபதியை தன் வீட்டுக்கு கூட்டிப் போகிறார். அங்கு இருவரும் மது அருந்த, அந்த மயக்கத்தோடு காரில் ஏறி சுற்று வட்டாரத்தில் கொஞ்ச நேரம் சுற்றித் திரிந்துவிட்டு, வீடு திரும்புகிறார்கள்.
கத்ரினாவின் கணவர் சுடப்பட்டு இறந்திருப்பதை பார்த்து அதிர்கிறார்கள். தான் ஏதோ விபரீதத்தில் சிக்கியிருக்கிறோம்’ என்பதை உணர்ந்து தப்பியோடுகிறார் விஜய் சேதுபதி.
தகவலறிந்து போலீஸ் வந்து சேர, கத்ரீனாவோடு விஜய் சேதுபதியையும் பிடித்து விசாரிக்க கதையில் பற்றிக் கொள்கிறது பரபரப்பு…
கொலையைச் செய்தது யாராக இருக்கும்? காரணம் என்னவாக இருக்கும்? கதையின் போக்கை வைத்து நாம் சிலவற்றை யோசிக்க, எதிர்பார்க்காத முடிவைத் தருகிறது அந்தாதுன்’ இயக்குநர் குழுவின் அசத்தலான ஸ்கிரின்பிளே.
படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லாமுமாக கத்ரினா கைஃப். திடுதிப்பென நட்பான ஒருவருடன் மது அருந்தி மகிழ்வது, அந்த நபர் எல்லைமீற அழகாய் தடுத்து கடந்து செல்வது என இடைவேளை வரை இயல்பான நடிப்புப் பங்களிப்பால் கவர்பவர், பின்னர் வேறொரு அவதாரமெடுத்து செய்வதெல்லாம் அட்டகாச அமர்க்களம்!
செய்த கொலைக்கு தண்டனை அனுபவித்து திரும்பிய மறுநாளே மற்றொரு கொலைப் பழியில் சிக்குவது, கொலையாகி கிடக்கும் உடலைப் பார்த்ததும் தான் வந்துபோன தடயங்களை அழிப்பது, நடந்த கொலைக்கான பின்னணியை சாதுர்யமாக கண்டுபிடிப்பது என கலக்கலான உடல்மொழியால் கண்களை விரியவைக்கிறார் விஜய் சேதுபதி!
காவல்துறை அதிகாரியாக வந்து விசாரணையில் ஈடுபடும் காட்சிகளில் நடிப்பின் முதிர்ச்சியைக் காட்டுகிறார் ராதிகா சரத்குமார், காவல்துறை உயரதிகாரியாக வருகிற சண்முகராஜனும் கவனிக்க வைக்கிறார்.
ராதிகா ஆப்தே ஒருசில நிமிடங்கள் எட்டிப் பார்க்கிறார். பாரில் பாடுபவராக வந்துபோகிறார் காயத்ரி.
கத்ரினாவின் குழந்தையாக வருகிற பரி ஷர்மா, கத்ரினாவுக்கு தூண்டில் போட ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்குகிற கவின் ஜெ பாபு என மற்ற நடிகர்கள் கதையின் தன்மையுணர்ந்து மிகமிக பொருத்தமாக நடித்திருக்க,
நேர்த்தியான ஒளிப்பதிவு, அலட்டலற்ற பின்னணி இசை, கச்சிதமான எடிட்டிங் காட்சிகளுக்கு கூடுதல் பலம் தந்திருக்கிறது.
ஹிந்திப் படமென்றாலும் அது தெரியாதபடி, தமிழ்ப் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதற்காக பெரியளவில் மெனக்கெட்டிருக்கிற, அதற்கேற்றபடி நடிகர்களை வளைத்துப் போட்டிருக்கிற இயக்குநர் ஸ்ரீராம் ராகவனை இழுத்தணைத்துப் பாராட்டலாம்!