இளையராஜாவின் இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார்! -மின்மினி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா குறித்து தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா பெருமிதம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் ’மின்மினி’ படத்தை ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார். கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. முன்னதாக படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், “இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. இந்தப் படத்திற்காக கடந்த 2022-ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். அவருக்கும் என் இசை பிடித்திருந்தது. ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது. என்னை நம்பி வேலை கொடுத்த ஹலிதா மேமுக்கும் எனக்கு வேலையில் பக்கபலமாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் நீங்க பிடித்திருந்தால் நல்லதா சொல்லுங்க, இல்லை என்றாலும் சந்தோஷம்தான்” என்றார்.

இயக்குநர் ஹலிதா ஷமீம், “’மின்மினி’ இயக்குநர் ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது. குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் எல்லோருக்கும் நன்றி. கண்டிப்பாக நீங்கள் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான மனோஜ் பரமஹம்சா, “லாப நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கவில்லை. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான். பாலச்சந்தர் சார் எப்படி ரஜினி, கமல் சாரை அறிமுகப்படுத்தினாரோ அப்படி நாங்களும் இந்தப் படத்தில் நல்ல நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இளையராஜா இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார். ஹலிதா எந்த விஷயத்திலும் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பாதவர். இந்தப் படம் சிறப்பாக வர காரணம் அவர்தான்” என்றார்.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், நடிகை எஸ்தர், நடிகர் கெளரவ் காளை, நடிகர் பிரவீன் கிஷோர், பாடகர் சிரிஷா, ‘திங்க் மியூசிக்’ சந்தோஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here