அண்டை நாட்டு தீவிரவாதிகள் மூலம் தாய்நாட்டுக்கு வரவிருக்கிற ஆபத்தை, லண்டனிலிருந்து தடுக்கிற இந்திய குடிமகன். இந்த ஒன்லைனில் பரபரக்கிறது ‘மிஸன் சாப்டர் 1.’
அருண் விஜய் ஜெயிலர் பொறுப்பு வகிக்கிற நேர்மையான காவல்துறை அதிகாரி. அந்த நேர்மையால் தீவிரவாதிகளின் வெடி குண்டுக்கு மனைவியைப் கொடுக்கிறார். மகளின் உடல்நலப் பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனுக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட, சிகிச்சைக்காக 30 லட்சம் தேவைப்பட, அதையும் சிரமப்பட்டு தயார் செய்துகொண்டு லண்டனுக்கு போய்ச் சேர்கிறார். மகளை மருத்துவமனையில் சேர்த்தபின் ஒரு அயோக்கியனின் சதியால் போலீஸில் சிக்கி சிறைக்கு செல்கிறார்.
அந்த சிறையில் இந்தியாவுக்கு பேராபத்தை உருவாக்க திட்டமிடுகிற தீவிரவாதியின் கைக்கூலிகள் இருப்பதை அறிந்து கொள்கிறார். அவர்களால் சிறையில் பெரியளவில் கலவரம் உருவாகி சிறை வளாகம் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்கள். அருண் விஜய்யின் மகளின் உயிரைப் பறிக்கவும் திட்டமிடுகிறார்கள். சிகிச்சைக்கான 30 லட்ச ரூபாயும் கிடைக்காது என்ற பரிதாப நிலையும் உருவாகிறது.
இப்படியான சூழ்நிலையில் தீவிரவாதிகளின் சதிகளை முறியடிக்கவும், மகளை அவர்களிடமிருந்து மீட்கவும் அருண் விஜய் எடுக்கும் முயற்சிகளே திரைக்கதை… இயக்கம் விஜய்
காவல்துறை அதிகாரியாக கம்பீரத் தோற்றத்துடன் வருகிற அருண் விஜய் ஆக்சன் காட்சிகளில் சூறாவளியாய் சீறுகிறார். மகளைக் காப்பாற்றப் போராடும்போது நெகிழ வைக்கும் நடிப்புக்கு மாறுகிறார்.
லண்டனிலுள்ள சிறைச்சாலையொன்றின் ஜெயிலராக வருகிற எமி ஜாக்ஸன் ஆக்சன் காட்சிகளில் அதிரடி அவதாரம் எடுத்திருக்கிறார்.
தான் நர்ஸாக இருக்கும் மருத்துவமனையில் தனது பாதுகாப்பிலிருக்கும் குழந்தை தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிவிட, அந்த குழந்தையை மீட்க களமிறங்கி அடிதடியில் ஈடுபடும் நிமிடங்களில் கவனிக்க வைக்கிறார் நிமிஷா சஜயன்.
அருண் விஜய்யின் மகளாக வருகிற பேபி இயல் காட்சிகளின் தன்மையுணர்ந்து, துறுதுறுப்பான நடிப்பால் மனதுக்குள் நிறைகிறார்.
லண்டன் சிறையில் அருண் விஜய்க்கு நண்பனாகிற அபி ஹாசன், தீவிரவாதிகளின் தலைவன், அவனது உத்தரவுக்கு கட்டுப்படுபவர்கள், லண்டன் சிறை அதிகாரிகள் என மற்ற நடிகர்களின் பங்களிப்பு கச்சிதம்.
ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் மனதைவருட, பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு சுறுசுறுப்பு சிறகு பொருத்தியிருக்கிறது.
இதெல்லாம் நடக்குமா? நடக்க வாய்ப்பில்லையே? என்றெல்லாம் யோசிக்க வைத்தாலும் படமாக்கிய விதத்தில் லண்டன் சிறை, அதற்குள் கலவரம் என கடந்தோடும் காட்சிகள் அத்தனையும் விறுவிறுப்புக்கு கேரண்டி தருகின்றன. தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு சற்றே அயர்ச்சி தரவும் செய்கின்றன.
குறைகள் சில இருந்தாலும் தேசப் பற்றும், பாசப் பற்றும் கொண்டவர்களை ஏதோவொரு விதத்தில் கவராமல் விடாது இந்த மிஸன் தருகிற விஷன்!