கணவன் மனைவி பிரச்சனைக்குள் ‘மூன்றாம் மனிதன்‘ நுழைவதால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வுப் பாடம் நடத்தியிருக்கும் படம்.
ஒரு நடுத்தர வயதுப் பெண், காவல்துறை அதிகாரியான தன் கணவனை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறார். போலீஸாரின் தேடல் துவங்குகிறது. காணாமல் போனவர் கை கால் துண்டிக்கபட்டு சடலமாக கிடைக்க, கொலையாளி யார் என கண்டுபிடிப்பதற்கான விசாரணை தீவிரமடைகிறது.
முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் கைதாகிறார் ஒரு குடிகார ஆசாமி. அடுத்ததாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி மீதும், கைதான குடிகாரனின் மனைவி மீதும் போலீஸின் சந்தேகப் பார்வை விழுகிறது. அதே வழக்கில் இரண்டு இளைஞர்களும் கைதாகி விசாரிக்கப்படுகிறார்கள். நடந்த கொலைக்கும் போலீஸ் சந்தேகப்படுகிற, கைது செய்த அத்தனை பேருக்கும் ஒவ்வொரு விதத்தில்
தொடர்பு இருக்கிறது.
அந்த தொடர்பு என்ன? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? இப்படி எதிர்பார்ப்பைத் தூண்டும் கேள்விகளுக்கு குடிபோதை, கள்ளக்காதல் என வெவ்வேறு விஷயங்களை இணைத்துக் கொண்டு பயணிக்கிற பரபரப்பான திரைக்கதையில் பதில்கள் இருக்கிறது. இயக்கம் ராம்தேவ்
மனைவியோடும் மகனோடும் மகிழ்ச்சியாக வாழ்வது, கெட்ட சகவாசத்தால் குடிக்கு அடிமையாகி கடனை அடைக்க முடியாமல் மனைவியின் எதிர்ப்பைச் சம்பாதிப்பது, அந்த விஷயத்தில் மனைவிக்கு திருப்திபடுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவது, கொலைப் பழியில் சிக்கினாலும் தன் அப்பாவித்தனத்தால் மீண்டு வருவது என எளிய நடிப்பைத் தந்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குநர் ராம்தேவ். தன் பெயரை ‘உறங்காப்புலி’ ராமர் என்று சொல்லி அந்த உறங்காப்புலிக்கு அர்த்தம் சொல்வது ரசிக்க வைக்கும் ரகளை!
தன் கணவனுக்கும் வேலைக்காரப் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு கணவனை சிசிடிவி கண்காணிப்புக்குள் கொண்டு வருவது, அதற்கு உதவிய நபரின் சதிவலையில் சிக்கி நிம்மதியிழப்பது என துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் சோனியா அகர்வால்!
நல்லவிதமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த கணவன் போதையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியபின் மன உளைச்சலுக்கு ஆளாவது, செல்லம்மா என்ற பெயர் சுமந்து வரும் அவர் இன்னொரு ஆணின் செல்லமான வார்த்தைகளில் மயங்கி எல்லை மீறுவது, கணவனை கொலை செய்கிற அளவுக்கு துணிச்சல் பெறுவது, செய்தவை தவறென உணர்ந்து திருந்துவது என கதையின் மையத்தில் நின்று சுற்றிச் சுழன்றிருக்கிறார் பிரணா. களையான முகமும் அதில் ஆசை, பாசம், காமம், இயலாமை, பரிதாபம் என அனைத்தும் கதையின் தேவைக்கேற்ப பிரதிபலிக்கிற விதமும் கவர்கிறது. அம்மணி காட்சிகளின் அவசியம் உணர்ந்து மெல்லிய கவர்ச்சி தரிசனமும் தந்திருக்கிறார்.
காவல்துறை உயரதிகாரியாக இயக்குநர் பாக்யராஜ். சந்தேக வட்டத்துக்குள் வந்து சிக்கியவர்களை அடித்துத் துவைக்காமல், அன்பும் அதட்டலுமாய் விசாரித்து உண்மைகளை வரவைக்கும் சாமர்த்தியசாலியாக தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார். குற்றவாளிகளை மனம்போன போக்கில் மன்னிப்பது ஏற்கும்படியில்லை.
தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை மயக்கி, குஷியாக நாட்களைக் கழிக்கிற ரிஷிகாந்த்தின் நடிப்பு கச்சிதம்.
தன்னிடம் உதவி கேட்ட பெண் தன் அந்தரங்க பிரச்சனைகளை மனம் திறந்து சொல்ல, அதை சாதகமாக்கி அவளை அனுபவிக்கத் துடிக்கிற அதற்காக குற்றச் செயலில் ஈடுபடுகிற ஸ்ரீநாத்தின் வில்லத்தனம் பரவாயில்லை ரகம்.
அம்மாக்களின் தகாத உறவு தந்த கசப்பால் திசைமாறித் திரிந்து, வாழ்நாளை சிறையில் கழிக்கிற அளவுக்கு மாற்றிக் கொள்கிற அந்த இரண்டு இளைஞர்களும் கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்க, மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பில் குறையில்லை.
வேணு சங்கர், தேவ்.ஜி இசையில் ‘அரளிப்பூ வாசம்; ஆள மயக்கும் நேசம்’ பாடல் தென்றலின் இதம் தர, படம் வலியுறுத்தும் கருத்தைப் பிரதிபலிக்கிற ‘ஆம்பளையோ பொம்பளையோ’ பாடல் லேசாக அதிரும் இசையால் கவனிக்க வைக்கிறது.
அம்ரிஷ் அமைத்திருக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு கொஞ்சமே கொஞ்சம் வேகமூட்டியிருக்கிறது.
கதையோட்டத்திலிருக்கும் திருப்பங்கள் படத்தின் பலம். நடிகர்களின் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘கள்ளக் காதலால் நடக்கும் கொலைகள் பற்றிய செய்திகள் வராத நாட்களே இல்லை’ என்ற சூழலில், அப்படியான காதலால் பிள்ளைகள் பாதிப்படுவதை மையப்படுத்தி சமூக விழிப்புணர்வூட்ட முயற்சித்திருக்கிற மூன்றாம் மனிதன், டாஸ்மாக்கை இழுத்துப் போட்டு வெளுத்திருப்பதால் பாஸ்மார்க் போட்டுப் பாராட்டலாம்!