‘மூத்தகுடி’ சினிமா விமர்சனம்

சரக்கு சமூகத்தின் பெருங்கேடு‘ என விழிப்புணர்வுப் பாடம் நடத்தும் படம்.

பெயரிலேயே ‘குடி’யை வைத்திருக்கிற மூத்தகுடி என்ற கிராமத்தில், குடிபோதையால் ஒரு விபத்து ஏற்பட பல உயிர்கள் பரலோகம் போகிறது. அந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்துபோன, ஊர்ப் பெரிய மனுஷி மூக்கம்மா ‘ஊரில் இனி யாரும் குடிக்கக்கூடாது; குடித்தால் ஊரை விட்டு தள்ளி வைப்போம்’ என கட்டுப்பாடு விதிக்கிறார். மக்களும் கட்டுப்படுகிறார்கள்.

தொழிலதிபர் ஒருவர், அந்த கட்டுப்பாட்டை உடைத்து மூத்தகுடியில் மது ஆலை துவங்கி, எல்லோரையும் ‘குடி’மக்களாக்க திட்டமிடுகிறார். அதற்கு மூக்கம்மாவும் ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், சூழ்ச்சியில் இறங்குகிறார். சதிவலை விரிக்கிறார். அதில் யாரெல்லாம் விழுந்தார்கள், வீழ்ந்தார்கள் என்பதே கதையோட்டம்…

மதுவுக்கெதிரான இந்த படத்தில் காதல் மோதல், காமெடி கலாட்டா என கமர்ஷியல் அம்சங்களையும் ‘மிக்ஸ்’ பண்ணியிருக்கிறார் பெயரில் ‘பார்’ வைத்திருக்கிற இயக்குநர் ரவி பார்கவன்.

படத்தில் வருகிற பலரும் கதையின் நாயகர்களாக, நாயகிகளாக இருப்பதுபோல் அமைந்த திரைக்கதையில் முதன்மைப் பாத்திரத்தில் வருகிறார் தருண்கோபி. தான் நேசித்த பெண் தன் தம்பியை விரும்பும் விவரம் தெரியவர மனமுடைந்து போகிற காட்சிகளில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் கவனிக்க வைக்கிறார். அவருக்கு தம்பியாக வருகிற பிரகாஷ் சந்திராவின் முகத்தில் பிரகாசமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது திரைக்கதை.

நாயகி அன்விஷா லட்சணமாக இருக்கிறார். சிரிக்கும்போது அந்த லட்சணம் கூடுகிறது. தான் விரும்பும் ஆணிடம் காதலை சொல்வதாக நினைத்து அவனுடைய அண்ணனிடம் மனம் திறந்துபேசி மடத்தனம் செய்கிறார். நிறைவுக் காட்சியில் கத்தி ரத்தம் என வேறொரு அவதாரம் எடுக்கிறார். நடிப்பில் குறையில்லை.

செல்வத்தோடும், தன் பேச்சுக்கு ஊரே கட்டுப்படுகிற செல்வாக்கோடும் இருக்கிற மூதாட்டி மூக்கம்மாவாக கே.ஆர்.விஜயா. பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அனுபவ நடிப்பால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.

தலையாரியை ‘தள்ளாட’ வைத்து ஊரில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஊரில் மதுவாசனையே கூடாது என கட்டுப்பாடு விதித்தவரின் வாரிசுக்கு மப்பு ஏத்தி தப்பு பண்ண தூண்டுவது என கடந்தோடும் காட்சிகளில் இயக்குநர் ராஜ்கபூரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது பொருத்தமான வில்லத்தனம்.

ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம் புலியிடம் 5000 ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அதை திருப்பி வாங்கப் படும் பாடும், விதவிதமான அணுகுமுறையும் கலகலப்புக்கு உதவியிருக்கிறது.

‘யார்’ கண்ணன் உள்ளிட்ட இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு கச்சிதம்.

இந்த படத்துக்கு கதை, வசனமெழுதியிருக்கிற எம்.‘சரக்கு’ட்டி தனித்து தெரியும்படியான பாத்திரத்தில் வருகிறார்.

‘தண்ணி’க்கு எதிரான இந்த படத்தில் காஸ்ட்யூம்க்கு பணத்தை தண்ணியாக செலவு செய்திருக்கிறார்கள். ஆம்… படத்தில் நடித்த அத்தனை பேரும் அத்தனை காட்சியிலும் பளீர் வண்ணத்தில் புதுத்துணி உடுத்தி வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

கதை மாந்தர்களின் உடைகளில் இருக்கிற பளபளப்பு ஒளிப்பதிவிலும் இருந்திருக்கலாம்.

பின்னணி இசை பரவாயில்லை.

உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும் ‘குடி மக்கள் மீது விழும் இடி‘ என எடுத்துச் சொல்ல முயற்சித்திருப்பதற்காக படக்குழுவை பாராட்டு ‘போதை’யால் குளிப்பாட்டலாம்!

-சு. கணேஷ்குமார், startcutactionn@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here