‘முகுந்தன் உன்னி அசோசிடேட்ஸ்’ (மலையாளம்) சினிமா விமர்சனம்

மலையாளப் படங்களில் எப்போதுமே கதையாழம் அதிகம். அந்த வரிசையில் ‘வொர்த் வாட்சிங்’ என அஷ்யூரன்ஸ் தரும்படியிருக்கிறது இன்சூரன்ஸ் மோசடிகளை இழுத்துப் போட்டு வெளுத்து வாங்கியிருக்கும் ‘முகுந்தன் உன்னி அசோசிடேட்ஸ்.’

உப்புமா அட்வகேட் ஒருவர் குறுக்கு வழியில் சாமர்த்தியம் காட்டி அண்ணாந்து பார்க்கிற உயரத்துக்குப் போவதே கதைக்களம்!

அட்வகேட் முகுந்தன் உன்னி வாகன விபத்தைக் காரணமாக்கி இன்சூரன்ஸ் தொகையைக் கறக்க எப்படியெல்லாம் சூழ்ச்சிவலை பின்னலாம் என யோசித்து சிலபல திட்டங்களை வகுக்கிறார்; பணத்தைப் பெருக்குகிறார்.

பாதகமான பாதை எப்போதுமே சாதகமாக இருந்துவிடுமா என்ன? சிக்கல்கள் சூழத்தானே செய்யும். அப்படியே நடக்கிறது. அத்தனையும் பரபரப்பாய், விறுவிறுப்பாய், சுவாரஸ்யமாய்… இயக்கம்: அபினவ்  சுந்தர்  நாயக்

கதைநாயகன் வினீத் ஸ்ரீனிவாசனின் அப்பாவித் தோற்றம் ஏற்றுள்ள கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இடத்தில் களமிறங்கி படபடவென தகவல்கள் திரட்டுவது, பாதிக்கப்பட்டோரை மூளைச் சலவை செய்வது, போலீஸுக்கே ரூட் போட்டுக் கொடுப்பது என சுற்றிச் சுழல்கிறார். அத்தனையும் பரபரப்பாய், விறுவிறுப்பாய், சுவாரஸ்யமாய்…

சுராஜ்  வெஞ்சாரமூடு , சுதை  கோபா , அர்ஷா  பைஜூ , தன்வி  ராம் , ஜார்ஜ்  கோரா , ரியா  சாய்ரா  , சுதீஷ் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருவோரின் நடிப்புப் பங்களிப்பு கதையோட்டத்தின் பலம்!

காட்சிகளின் தேவைக்கேற்ப ஏறியிறங்குகிறது சிபி மேத்யூ அலெக்ஸின் பின்னணி இசை!

கேரளப் படங்கள் என்றாலே ஒளிப்பதிவாளரின் கேமரா, திரும்பிய பக்கமெல்லாம் பரந்து விரிந்த நீர்நிலைகளையும் பசுமையின் செழுமையையும் துரத்தியோடுவதே வழக்கம். விஸ்வஜித் ஒடுக்கதில் அந்த வழக்கத்திலிருந்து விலகி ஆக்ஸிடென்ட் ஸ்பாட், ஆஸ்பிடல் என கதைக்கேற்றபடி மாறுபட்ட கோணத்தில் காட்சிகளைச் சுருட்டியிருக்கிறார்.

சீரியஸான கதையில் சரியான விகிதத்தில் காமெடி கலந்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்! அதற்காகவே முகுந்தன் உன்னியை பார்க்கலாம்; ரசிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here