இசையை மையமாகக் கொண்டு, இசைஞானியின் இசையோடு பின்னிப் பிணைந்து தெலுங்கில் படமாகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படம்.
மாணவர்களை மதிப்பெண் குவிக்கிற இயந்திரகளாக்கிக் கொண்டிருக்கிற பள்ளியொன்றில், தனது கலை சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் விரக்தியில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார் அந்த துறையின் ஆசிரியர் ஷர்மான் ஜோஷி. ஒரு கட்டத்தில் அதே பள்ளியில் மியூசிக் டீச்சர் பணியில் இணைகிறார் ஸ்ரேயா. அவருடைய இசை வகுப்புக்கும் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை தொடர்கிறது.
தங்களுடைய கற்பித்தல் திறமைக்கு அந்த பள்ளியில் எந்தவித ஊக்குவிப்பும் கிடைக்காததால் ஸ்ரேயாவும் ஷர்மானும் தனியாக பயிற்சியகம் தொடங்குகிறார்கள். பல்வேறு தடைகளைத் தாண்டி மாணவ, மாணவிகளைச் சேர்க்கிறார்கள். ‘சவுன்ட்ஸ் ஆஃப் மியூசிக்’ என்ற பெயரில் இசைநடன கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுகிறார்கள். அதற்கும் பல விதங்களில் சிக்கல்கள் சூழ்கிறது… அதையெல்லாம் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது திரைக்கதை. நினைத்ததை நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பது படத்தின் நிறைவுக் காட்சி. இயக்கம் பாப்பாராவ் பிய்யாலா
குழந்தைகளோடு கலந்துப் பழகி தானும் குழந்தையாகிவிடுகிற மென்மனதுக்காரர், இனிமையான இசைப் பயிற்சியாளர், சவால்களைச் சமாளிப்பதில் நிதானம் காட்டுபவர், எடுத்துக் கொண்ட செயலில் உறுதியாக இருப்பவர் என பட்டாம்பூச்சியாய் படபடக்கும் இமைகளுக்குள் உற்சாகமாய் உருளும் விழிகளில் அநேக உணர்வுகளைக் கொட்டுகிறார் ஸ்ரேயா!
எத்தனை சோதனை வந்தாலும் தன்மை மாறாத மனிதராக கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஷர்மான் ஷோஷி. இயல்பான நடிப்பால் மனம் கவர்கிறார்.
பயிற்சிக்காக கோவா சென்ற மகள் காணாதுபோன செய்தியறிந்து பதறுவதும், மேடையில் மகளின் கலைத் திறமையைக் கண்டு மனதுக்குள் பெருமிதப்படுவதுமாக காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிரகாஷ்ராஜிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது தேர்ந்த நடிப்பு.
பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி, அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி உள்ளிட்ட பலரது நடிப்பு பங்களிப்பு நேர்த்தி! குழந்தை நட்சத்திரங்களும் மனம் நிறைக்கிறார்கள்.
பாட்டியாக வருகிற லீலா சாம்சனின் அலட்டலற்ற நடிப்பு தனித்து தெரிகிறது.
கதைக்களத்திற்கு மேற்கத்திய இசை தேவைப்பட்டிருக்கிறது. அதற்கேற்ற துள்ளல் இசை படம் முழுக்க நிறைந்திருக்கிறது. டைட்டிலில் இசை இளையராஜா என போடுவதால் நாம் ‘வழிநெடுக காட்டுமல்லி’ போன்ற மயக்கும் இசையை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்!
மென்மையான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கமிஷனர் மகளின் காதல், ஒரு கட்டத்தில் அவள் காணாது போக தேடல் வேட்டையில் இறங்கும் போலீஸ் என பரபரப்பூட்டும் காட்சிகளும் உண்டு.
கலர்ஃபுல்லான காட்சிகளோடு கருத்தாழமும் கொண்ட இந்த படம், ‘மாணவ மாணவிகளின் படிப்பைத் தாண்டிய மற்ற கலைத் திறமைக்கு தடுப்பு வேலி போடாதீர்கள்’ என வலியுறுத்திய விதத்தில் பாராட்டுக்குரியதாகிறது!