அடக்குமுறை அதிகரிக்கும்போது தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த கைகளும் இணைந்து அதிகாரத்தின் கதவுகளைத் தகர்க்கும்! -‘நாற்கரப்போர்’ பட இயக்குநர் ஸ்ரீ வெற்றி காட்டம்

குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் என்பதையும், அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதையும் சொல்லும் அழகான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘நாற்கரப்போர்.’

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் தூய்மை பணியாளர்களின் அவல நிலையையும், அவர்களது நலன் குறித்த அரசின் பாராமுகத்தையும் குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் ஸ்ரீ வெற்றி ஒரு நாள் அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும் என்கிற தனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார்

இதுகுறித்து அவர் பேசும்போது, “அரசியல், உயர்சாதி, பணம், விளையாட்டு என்கிற வெள்ளை காய்களுக்கும் ஏமாளிகளான மக்கள், ஒடுக்கப்படுபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியால் இழிவு படுத்தப்படுபவர்கள் என்கிற கருப்பு காய்களுக்கும் காலங்காலமாக பல நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நடந்து வரும் ஒரு சதுரங்க வேட்டை தான் தான் ‘நாற்கரப்போர்.’

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை இன்றும் இந்தியா முழுவதும் இருப்பது வேதனை அளிக்கிறது. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கவோ, உருவாக்கியதை வெளிநாடுகளில் இருந்து வாங்கவோ மனமில்லை என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றுவது சாதியின் பேரால் சிலருக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதில் ஆதிக்க சக்திகள் உறுதியாக இருக்கின்றன.

2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவெங்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தனைக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பும், உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்கிற சட்டம் காகிதத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இதுவரையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

ஒவ்வொரு திருநாளையும், திருவிழாக்களையும், மாநாடுகளையும், நடத்தி கொண்டாடிவிட்டு எதோ சாதித்த மனநிலையில் மகிழ்கிறோம். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குப்பின் தூய்மை பணியாளர்களின் வலி எவ்வளவு கொடியது என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களின் வேலை எப்படியாவது நிரந்தரமாக்கப்படும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் புயல், வெள்ளம், மழை, பேரிடர் காலங்களிலும், சென்னை கடலில் எண்ணெய் கொட்டியபோதும், உயிரை பறிக்கும் கொரோனா காலகட்டங்களிலும் ஓடி ஓடி உழைத்து, இன்று வரை எந்நேரமும் இந்தியா முழுவதும் மனிதர்களின் கழிவுகளை அவர்கள் சுத்தம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் அத்தொழிலாளர்கள் மீது அதிகரிக்கும் அடக்குமுறைகளும், சமூக அவலங்களும், சாதிய வன்ம திணிப்புகளும், பொருளாதார சூழ்நிலைகளும் அவர்களது மூளையை நெறிக்கும் போது, அச்சமூகத்தின் ஒட்டு மொத்த கைகளும் ஒண்றினைந்து அதிகாரத்தின் கதவுகள் தகர்க்கப்படும்.

ஒரு குற்ற உணர்வோடும், கையாலாகாத நிலையோடும் இந்த சமுதாயத்தில் இருந்த நான் பலருடைய தொடக்கத்துக்கு இடைப் பத்தியாக நாற்கரப்போரில் நின்று நகர்வடைகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது மாறுதலுக்கான நேரம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here