இளையராஜா எழுதிய பாடலை முதன் முறையாக பாடிய யுவன்சங்கர் ராஜா! ஆச்சரியங்கள் அணிவகுக்கும் ‘நினைவெல்லாம் நீயடா.’

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘நினைவெல்லாம் நீயடா.’

பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் மற்றும் யுவலட்சுமி நடிக்கின்றனர்‌. முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘லேகா தியேட்டர்ஸ்’ பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417-வது படமாக உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டான ‘வழி நெடுக காட்டுமல்லி’ என்ற பாடலை எழுதிப் பாடிய இளையராஜா, இதுவரை கிட்டத்தட்ட 200 பாடல்களை எழுதியிருக்கிறார். தற்போது இந்த படத்திற்காக ‘இதயமே இதயமே இதயமே‌‌’ என்ற பாடலை எழுதியிருக்கிறார். பாடலை யுவன் சங்கர் ராஜாவும் ஸ்ரீஷா பகவதுல்லா பாடியிருக்கிறார்கள். இளையராஜா இசையில் பல பாடல்களை பாடி இருந்தாலும் இளையராஜா எழுதிய பாடலை யுவன் பாடியிருப்பது இதுவே முதல் முறை!

‘மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்’ என்ற பாடலை பழநிபாரதி எழுத கார்த்திக் பாடியிருக்கிறார். ‘வண்ண வரைகோள்கள்’ பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார்.

‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடலை இளையராஜாவுடன் சேர்ந்து பாடி பிரபலமான பெங்களூர் பாடகி அனன்யா பட், ‘வச்சேன் நான் முரட்டுஆசை’ மற்றும் ‘அழகான இசை ஒன்று’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார். மூன்று பாடல்களையும் சிநேகன் எழுதியிருக்கிறார். நடனக் காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் பெற்றிருக்கிறது. அஜித்தின் ‘துணிவு’ படப் பாடலை வெளியிட்ட ஜீ மியூசிக். தொடர்ந்து இந்த படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here